மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நவகிரி ஆற்றுப்பகுதியில் மண் அகழப்படுவதன் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் குறித்த பகுதியில் மண் அகழ்வினை நிறுத்தக்கோரியும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணங்கள் கோரியும் குறித்த பகுதி விவசாயிகள் இன்று கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
தமது பகுதிகளில் முன்னெடுக்கப்படும் மண் அகழ்வுகளை தடுத்து நிறுத்தி வயல் பகுதிகளை பாதிக்கும் வகையிலான நவகிரி ஆற்றுப்பகுதியை புனரமைக்க நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கண்ணபுரம் பகுதியில் உள்ள அலியார்வட்டை, காலார் வெட்டை,கன்டம் நாயாற்றுவட்டை ஆகிய பகுதிகள் நவகிரி ஆற்றின் ஒரு பகுதி உடைப்பெடுத்ததினால் அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
நவகிரி ஆற்றின் நாயாற்றுவட்டை பகுதியில் மேற்கொள்ளப்படும் மண் அகழ்வுகள் காரணமாக ஆற்றின் கட்டுகள் உடைப்பெடுப்பதனால் இந்த அழிவுகளை எதிர்கொள்வதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியில் சிலரால் சட்ட விரோதமான முறையில் மேற்கொள்ளப்படும் மண் அகழ்வுகளே இந்த நிலைமைக்கு காரணம் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கண்டத்தில் சட்டவிரோத மண் அகழ்வால் 1267 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த விவசாய நிலங்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கடன்பெற்றும் நகைகளை அடகுவைத்தும் செய்கைபண்ணப்பட்ட விவசாய நிலங்கள் நீரில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில் மிகவும் கஸ்டத்தினை எதிர்நோக்கியுள்ளதாகவும் தமக்கான நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
நவகிரி ஆற்றுப்பகுதியில் நடைபெறும் அனைத்துவிதமான மண் அகழ்வுகளும் நிறுத்தப்பட்டு அப்பகுதியில் உள்ள வயல் நிலங்களை பாதுகாக்கும் வகையில் கொங்கிறீட் கட்டுகளை அமைக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.