பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீசுதா. இவர் விஜய் நானி நடித்த யவடே, விஜய்தேவரகொண்டாவுடன் அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவருக்கும் பிரபல ஒளிப்பதிவாளர் ஷியாம் கே.நாயுடுவுக்கும் காதல் மலர்ந்தது. மகேஷ்பாபு நடித்த போக்கிரி, பிசினஸ்மேன், ஜூனியர் என்.டி.ஆர் நடித்த டெம்பர், அல்லு அர்ஜுனின் ஜுலாயி, ராம்சரண் நடித்த சிறுத்தா, வெங்கடேசின் பாடிகார்ட் உள்ளிட்ட பல படங்களுக்கு ஷியாம் கே.நாயுடு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சமீபத்தில் ஷியாம் கே.நாயுடு தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றி விட்டதாக ஸ்ரீசுதா போலீசில் புகார் அளித்தார். போலீசார் ஷியாமை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலையானார்.
இந்த நிலையில் ஸ்ரீசுதா தற்போது மீண்டும் போலீசில் அளித்துள்ள புகார் மனுவில், “எனக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு ஷியாம் கே.நாயுடுவும், அவரது உறவினர்களும் காரணம். ஷியாம் கே.நாயுடுவின் நண்பர்களும், உறவினர்களும் என்னை தாக்கி போலீசில் அளித்த புகாரை வாபஸ் பெறும்படி மிரட்டினர். தாக்கியதை வெளியே சொன்னால் உயிரோடு இருக்க மாட்டாய் என்றும் எச்சரித்தனர்’’ என்று கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.