இந்தியாவில் இருந்து கொண்டுவரப்படும் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளில் மூன்று இலட்சம் தடுப்பூசிகளை முதல் கட்டமாக பயன்படுத்தவும், சுகாதார பணியாளர்களுக்கே இவ்வாறு முதல் கட்டத்தில் தடுப்பூசிகள் வழங்கப்படும் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இரண்டாம் கட்டத்தில் இராணுவம், பொலிசார் மற்றும் பொது மக்களில் ஒரு தொகுதியினருக்கு தடுப்பூசிகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார பணிப்பாளர் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொள்ளவுள்ள நிலையில் அதன் ஏற்பாடுகள் மற்றும் முதல் கட்டத்தில் தடுப்பூசிகளை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டங்கள் குறித்து சுகாதார பணிப்பாளர் அசேல குணவர்தன இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
இந்தியாவில் இருந்து எதிர்வரும் 27 ஆம் திகதி கொவிட் -19 வைரஸ் தடுப்பூசிகள் கொண்டுவரப்படவுள்ள நிலையில் எதிர்வரும் 28 ஆம் திகதி இவற்றை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் முதல் கட்டமாக இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரத்தில் இருந்து மூன்று இலட்சம் தனி நபர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதில் முதல் கட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள சுகாதார பணியாளர்களில் ஐம்பது வீதமானவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாதுகாப்பு படையினர், பொலிசாரில் ஒரு தொகுதியினருக்கு இந்த தடுப்பூசிகள் வழங்கப்படும்.
இலங்கை முதல் தடவையாக இந்த முயற்சிகளை எடுக்கின்ற காரணத்தினால் எமக்கு அதிகளவிலான நேரம் தேவைப்படுகின்றது.
எனவே ஒரு மணித்தியாலத்தில் 15 தொடக்கம் 20 நபர்களுக்கு தடுப்பூசிகளை வழங்க ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளது.
எனவே ஒரு நாளைக்கு ஆறு அல்லது எழு மணிநேரம் இதற்காக ஒதுக்க வேண்டும். இவ்வாறு நாட்டில் தெரிவுசெய்யப்பட்ட மத்திய நிலையங்களில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும் என்ற வகையில் ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக பொதுமக்களில் தெரிவு செய்யப்பட்டுள்ள மிக முக்கிய நோயாளிகள், வயதானவர்கள் ஆகியோரை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இந்நிலையில் உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கை மக்களில் 20 வீதமானவர்கள் பயன்படுத்தக்கூடிய அளவிலான கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதாக தெரிவித்துள்ள நிலையில் அவர்கள் வழங்கும் 20 வீதமான தடுப்பூசிகளை ஏனையவர்களுக்கு கொடுக்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இந்தியாவில் இருந்தும் ரஷ்யாவில் இருந்தும் சீனாவில் இருந்தும் தடுப்பூசிகளை கொள்வனவு செய்யவும் அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் அறிவித்துள்ள நிலையில் எம்மால் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.