கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் சம்பந்தமாக ஏற்பட்டுள்ள நிலைமையானது இந்திய ஆக்கிரமிப்பின் ஒரு பகுதி என பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இராமாயணத்தை மேற்கோள்காட்டி அவர் விரிவான விளக்கத்தை வழங்கியுள்ளார்.
இது இந்திய ஆக்கிரமிப்பின் மற்றுமொரு பகுதி பல ஆயிரம் ஆண்டுகளாகச் சுயாதீனமாக இயங்கிய நாட்டை படிப்படியாக இந்தியாவின் மற்றுமொரு மாநிலமாக மாற்றும் வேலைத்திட்டம் நீண்டகாலமாகச் செயற்படுத்தப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடி ஏதோ ஒரு விதத்தில் துறைமுகத்தை வெற்றி கொண்டால், ராமன், இராவணன் கதை போல், இராவணனைத் தோற்கடித்து ராமன் வெற்றி பெற்றது போன்ற சம்பவமாகிவிடும்.
அப்படியானால் இரண்டாவது முறையாகப் பாரதம் இலங்கையைத் தோற்கடிக்கும். இலங்கை முன்னேற்றமடைவதையோ, சௌபாக்கியத்தை நோக்கிச் செல்வதையோ எந்த காரணம் கொண்டும் இந்தியா விரும்பாது. எமது சௌபாக்கியத்தைக் கைப்பற்றவே ராமன் வருகிறார்.
ராமன் வருவதற்கு முன்னர் அனுமானை அனுப்புவார். அனுமான் என்பவர் தீயை மூட்டுபவர். அனுமான் தனது வாலில் தீயை மூட்டி முழு நாட்டை எரித்தார் என்று தானே கூறுகின்றனர்.
ஒரு குரங்கு தனது வாலில் தீயை மூட்டிக்கொண்டு நாடு முழுவதும் தீயை மூட்ட முடியுமா? ஒற்றர்களை இலங்கைக்கு அனுப்புவார்கள் என்பதே இதற்கு இருக்கும் கதை. ஒற்றர்கள் வந்து ஆங்காங்கே தீயை மூட்டுவார்கள்.
இவ்வாறு தீயை மூட்டி இறுதியில் இலங்கையைச் சிக்கலான நிலைமைக்குள் தள்ளுவார்கள். இந்த தீ படிப்படியாகப் பரவி முக்கியமான இடத்திற்கு வரும். அண்ணனும், தம்பியும் பகைத்துக் கொள்வார்கள். அண்ணன், தம்பி என்பது யார். இராவணனும், விபீஷணனும். இறுதியில் விபீஷணன் தம்பி காட்டிக்கொடுப்பார்.
இறுதியில் அந்த அண்ணன் கட்டியெழுப்பிய ராஜ்ஜியம் அழிந்து போகும். இறுதியில் தனது நாட்டையும் அழித்து நாட்டை காட்டிக்கொடுத்தவர் என்ற நிலைமை விபீஷணனுக்கு ஏற்படும்.இது ராமன், இராவணன் கதையில் இருக்கும் உண்மையான கதை.
இந்திய தற்போது இதற்காகத்தான் வருகிறது. நாம் இந்த ஆக்கிரமிப்பில் சிக்கி இருக்கின்றோம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் எனவும் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.
தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நேற்று பெப்பிலியான சுணேத்ரா தேவி விகாரையில் நடைபெற்ற சந்திப்பின் போதே அபயதிஸ்ஸ தேரர் இதனைக் கூறியுள்ளார்.