அமெரிக்க வரலாற்றிலேயே முதல் முறையாக பெண் ஒருவர் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க ஃபெடரல் வங்கியின் முன்னாள் தலைவர் ஜேனட் ஏலன் (74) நிதியமைச்சராக நியமிக்க அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்தது.
அமெரிக்க நிதியமைச்சராக ஜேனட் ஏலனை நியமிப்பது தொடர்பாக செனட் அவையில் நேற்று நடந்த வாக்கெடுப்பில் ஆதரவாக 84 உறுப்பினர்களும், எதிராக 15 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதில் செனட் அவையில் தலைவராக இருக்கும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் நடத்திய வாக்கெடுப்பில் ஜேனட் ஏலன் நிதியமைச்சராக ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அமெரிக்க நிதியமைச்சராகப் பொருளாதார வல்லுநர் ஜேனட் ஏலன் முறைப்படி விரைவில் பதவி ஏற்பார். ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தில் கபினட் அமைச்சராக ஏலன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் தேசிய உளவுத்துறை இயக்குநராக அவ்ரில் ஹையின்ஸும், பாதுகாப்புத் துறை அமைச்சராக லொய்ட் ஆஸ்டினும் நியமிக்கப்பட்டனர். உள்துறை அமைச்சராக டோனி பில்கின் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார் எனத் தெரிகிறது.
உலகின் சிறந்த பொருளாதார வல்லுநர்களில் ஒருவராகக் கருதப்படும் ஜேனட் ஏலன். பிரவுன் மற்றும் யேழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர். பல்வேறு புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் சிறப்புப் பேராசிரியராகப் பாடம் நடத்தியுள்ளார். அமெரிக்க ஃபெடரல் வங்கியின் தலைவராக இருந்தபோது, இவரின் திறமை அறியப்பட்டது. அமெரிக்காவில் வேலையின்மை, பொருளாதாரச் சிக்கல் நிலவியபோது, இவரின் கொள்கைகள், திட்டங்கள் அவற்றிலிருந்து மீண்டுவர உதவின.
அமெரிக்க செனட் சபையில் நேற்று நடந்த வாக்கெடுப்பின்போது, ஜேனட் ஏலன் நிதியமைச்சராக நியமிக்கப்பட உள்ளதாக துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் முன்மொழிந்ததும் அதைக் குடியரசுக் கட்சியினரும் வரவேற்றனர்.
அமெரிக்கப் பொருளாதாரம் மேலும் சிறப்படைய ஜேனட் ஏலனின் வழிகாட்டுதல்கள், நிதிக்கொள்கைகள் மீது தங்களுக்கு நம்பிக்கையிருக்கிறது என்று அவர்கள் தெரிவித்தார்கள்.
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழுவில் 1994 முதல் 1997ம் ஆண்டுவரை ஜேனட் ஏலன் பதவி வகித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக கிளிண்டன் இருந்தபோது, அவரின் பொருளாதார ஆலோசகராக ஜேனட் ஏலன் பதவி வகித்துள்ளார்.
2004 முதல் 2010ஆம் ஆண்டுவரை சான்பிரான்சிஸ்கோ ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவராக ஜேனட் ஏலன் இருந்தார். 2014 முதல் 2018ஆம் ஆண்டுவரை அமெரிக்க ஃபெடரல் வங்கியின் தலைவராக ஜேனட் ஏலன் இருந்தார். ட்ரம்ப் ஆட்சியில் ஜேனட் ஏலனுக்குப் பதவி நீட்டிப்பு வழங்கப்படவில்லை.