‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ இயக்குநர் ராப் கோஹென் மீது நடிகை ஏசியா அர்ஜெண்டோ பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
‘டிரிப்பிள் எக்ஸ்’, ‘ஃபான்தம் ஆஃப் ஓபரா’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஏசியா அர்ஜெண்டோ. கடந்த சில தினங்களுக்கு முன்பு சினிமா உலகை அதிரச் செய்த ஹார்வீ வெய்ன்ஸ்டீன் பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் தயாரிப்பாளர் ஹார்வீ வெய்ன்ஸ்டீனுக்கு எதிராகத் துணிச்சலுடன் வாய் திறந்த ஒரு சில பெண்களில் இவரும் ஒருவர்.
இந்நிலையில் பிரபல வார இதழ் ஒன்றுக்குச் சமீபத்தில் பேட்டியளித்த ஏசியா அர்ஜெண்டோ, ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’, ‘டிரிப்பிள் எக்ஸ்’ படங்களின் இயக்குநரான ராப் கோஹென் மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
2002ஆம் ஆண்டு ‘டிரிப்பிள் எக்ஸ்’ படப்பிடிப்பின்போது கோஹென் தனக்கு மயக்க மருந்து கொடுத்து தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஏசியா குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தத் தகவல் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் ராப் கோஹெனைச் சரமாரியாகச் சாடி வருகின்றனர்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை கோஹென் தரப்பு முற்றிலுமாக மறுத்துள்ளது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோஹென் நடிகை ஏசியாவை ஒரு தோழியாகக் கருதினார் என்றும், தற்போது அவர் வைக்கும் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.