நாம் அனைவருமே சரும நிறம் ஒன்றுபோல் இருக்கவே விரும்புவோம். அதுமட்டுமின்றி அதுவே அழகும் கூட. ஆனால் வெளியே வெயிலில் அதிகம் சுற்றுவதால், பலரது முகம் ஒரு நிறத்திலும், கை ஒரு நிறத்திலும் இருக்கும். இப்படி ஒவ்வொரு பகுதியின் நிறமும் வேறுபட்டு காணப்படுவதைத் தவிர்க்க, முகம், கை போன்ற பகுதிகளுக்கு அடிக்கடி பராமரிப்புக்களைக் கொடுத்து வர வேண்டும். அதில் முகம் அழகாக பளிச்சென்று இருப்பதற்கு ஃபேஸ் மாஸ்க் போடுவோம்.
சிலருக்கு என்ன தான் முகத்திற்கு பராமரிப்பு கொடுத்து வந்தாலும், வாயைச் சுற்றியுள்ள பகுதி மட்டும் கருப்பாக இருக்கும். இதற்கு சருமத்தில் மெலனின் என்னும் நிறமியின் உற்பத்தி அதிகரிப்பதால் தான் இது நிகழ்கிறது. அதுமட்டுமின்றி, சில மருத்துவ நிலைமைகள், மருந்துகள் மற்றும் வாழ்க்கை முறை பழக்கம் உள்ளிட்ட வேறு சில காரணிகளும் இதற்கு காரணமாக இருக்கலாம்.
பொதுவாக இம்மாதிரியான சரும கருமைகளுக்கு சிகிச்சை தேவையில்லை. ஆனால் ஒருசில இயற்கை வழிகளின் மூலம் இந்த பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கலாம். கீழே வாயைச் சுற்றி இருக்கும் கருமையைப் போக்க உதவும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
கடலை மாவு
கடலை மாவுடன், சருமத்தில் உள்ள கருமையைப் போக்க உதவும் மஞ்சளை சேர்த்துப் பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும். அதற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்து, அதில் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிது பால் அல்லது நீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ளவும். பின் அந்த கலவையை வாயைச் சுற்றி தடவி 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
ஓட்ஸ் ஸ்கரப்
ஓட்ஸ் ஒரு அற்புதமான உணவுப் பொருள் மட்டுமின்றி, அழகு பராமரிப்பு பொருளும் கூட. இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சருமத்திற்கு பொலிவான தோற்றத்தைத் தர உதவும். அதற்கு சிறிது ஓட்ஸ் பொடியுடன், ஆலிவ் ஆயில் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மென்மையாக தேய்க்க வேண்டும். பின் குளிர்ந்த நுரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், விரைவில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
பப்பாளி
பப்பாளியில் ப்ளீச்சிங் பண்புகள் உள்ளன. இது சருமத்தில் உள்ள கருமையைப் போக்க உதவி புரியும். ஆகவே உங்கள் வாயைச் சுற்றி கருமையாக இருந்தால், நன்கு கனிந்த பப்பாளியை மசித்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, கருமையாக இருக்கும் வாய் பகுதியைச் சுற்றி தடவி, 30 நிமிடங்கள் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.
உருளைக்கிழங்கு ஜூஸ்
பப்பாளியைப் போன்றே உருளைக்கிழங்கிலும் ப்ளீச்சிங் பண்புகள் உள்ளன. இது சருமத்தில் உள்ள அதிகப்படியான நிறமிகளை நீக்க உதவும். இந்த வழி சென்சிடிவ் சருமத்தினருக்கும் மிகவும் நல்லது. அதற்கு உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி அரைத்து சாறு எடுத்து, முகத்தில் மற்றும் வாயைச் சுற்றி 20 நிமிடம் மசாஜ் செய்து, பின் நீரால் கழுவ வேண்டும்.
மஞ்சள்
மஞ்சளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்திற்கு பளபளப்பையும், பொலிவையும் தருவதோடு, புத்துயிர் அளிக்கும். உங்களின் முகத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் கருமையாக இருந்தால், அப்பகுதியில் உள்ள மெலனின் அளவைக் குறைக்க மஞ்சள் உதவி புரியும். அதற்கு ஒரு பௌலில் மஞ்சள் தூளை எடுத்து, அதில் ரோஸ்வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, வாயைச் சுற்றி தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்