குழந்தைகளை மையமாக வைத்து சார்லஸ் இயக்கிய ‘அழகு குட்டி செல்லம்’ விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் வாழ்க்கையை மையமாக வைத்து ‘சாலை’ என்னும் பெயரில் தனது அடுத்த படத்தை சார்லஸ் இயக்கியிருக்கிறார்.
உறையவைக்கும் கடுங்குளிரில் முழுக்க முழுக்க காஷ்மீரை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் ‘சாலை’ படம் குறித்து இயக்குனர் சார்லஸ் கூறுகையில் “வாழ்க்கையும் ஒரு சாலை போன்றதுதான். வாழ்க்கை என்னும் சாலையில் ஒருவன் எதை நோக்கி பயணிக்கிறான் என்பதைப் பொறுத்தே அவனது வாழ்வு அமையும். இதனை மையக்கருத்தாகக் கொண்டு இப்படத்தின் கதையை அமைத்துள்ளேன். ஹாலிவுட் தரத்தில் ஒரு படத்தை இந்தியாவில் இயக்க வேண்டும் என்ற எனது கனவு இப்படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது.
10 அடிக்கு ஒரு ராணுவ வீரர் இருக்கும் காஷ்மீரில் முதல் நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடத்தும்போது பயமாக இருந்தது. பின்னர் அதுவே பழகிவிட்டது. வழக்கமான தமிழ்ப்படங்கள் போல இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட ஒரு படமாக சாலை இருக்கும்” என்றார்.
தயாரிப்பாளர்கள் கிரேஸ் தியாகராஜ், ரஞ்சித் சக்கத் தயரித்திருக்கும் இப்படத்துக்கு பாலமுருகன் ஒளிப்பதிவு செய்ய,சங்கர் சுகவனம் இசையமைத்திருக்கிறார். ஹீரோ, வில்லன் என இரட்டை வேடங்களில் விஷ்வா நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கிரிஷா குரூப்பும், முக்கிய வேடங்களில் ஆடுகளம் நரேன், அஜித் மணியன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
‘அழகு குட்டி செல்லம்’ திரைப்படத்தைப் போல இப்படமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.