34 வயதில் அறிமுகமான சுழற்பந்துவீச்சாளர் நுமான் அலி மற்றும் யாசிர் ஷா ஆகியோரின் பந்துவீச்சால், கராச்சியில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான் அணி.
போட்டி முடிய இன்னும் ஒருநாள் இருக்கும் போது 4வது நாளிலேயே ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் முன்னிலை பெற்றுள்ளது.
34 வயதில் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளராக அறிமுகமாகிய நுமான் அலி 2வது இன்னிங்ஸில் 35 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை தனது முதல் ஆட்டத்திலேயே எடுத்து அசத்தினார். யாசிர் ஷா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்குத் துணையாக இருந்தார்.
பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் கப்டனாக பொறுப்பேற்ற பாபர் ஆசமுக்கு முதல் போட்டியே வெற்றியாக அமைந்துள்ளது.
தென்னாபிரிக்காவுடன் 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் அணி பெறும் 5-வது வெற்றி இதுவாகும். கடந்த 2007-ம் ஆண்டுக்குப் பின் பாகிஸ்தான் அணி தென்னாபிரிக்க அணியை வீழ்த்தியுள்ளது. 15 டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்துள்ளது.
ஆட்ட நாயகனாக முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த பவாத் ஆலம் தேர்வு செய்யப்பட்டார். முதல் இன்னிங்ஸில் தென்னாபிரிக்க அணி 220 ரன்கள் பெற்றது. பாகிஸ்தான் அணி 378 ரன்கள் சேர்த்து 158 ரன்கள் முன்னிலை பெற்றது.
2-வது இன்னிங்ஸை ஆடிய தென்னாபிரிக்க அணி 245 ரன்களுக்குள் ஆட்டமிழந்தது. 88 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 22.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாச்தில் வென்றது.
3-வது நாளான நேற்று முன்தின ஆட்ட நேர முடிவில் தென்னாபிரிக்க அணி தனது 2-வது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் சேர்த்திருந்தது. டீகொக் ரன் ஏதும் எடுக்காமலும், மகராஜா 2 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.
இருவரும் இன்றைய 4-வது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். டீ கொக் 2 ரன்கள் சேர்த்த நிலையில் யாசிர் ஷா சுழற்பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். மகராஜ் 2 ரன்னில் ஹசன் அலி பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி வெளியேறினார்.
7-வது விக்கெட்டுக்கு, பவுமா, லிண்டே ஓரளவுக்கு நிலைத்து ஆடினர். லிண்டே 11 ரன்களிலும் அதைத் தொடர்ந்து வந்த ரபாடா (1), நார்ட்ஜே (0) என விரைவாக விக்கெட்டை இழந்தனர். பவுமா 40 ரன்களில் நுமான் அலி பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார்.
தென்னாபிரிக்க அணி 2-வது இன்னிங்ஸில் 100.5 ஓவர்களில் 245 ரன்களுக்கு ஆட்டமிழந்து 87 ரன்கள் இலக்காக பாகிஸ்தானுக்கு நிர்ணயித்தது.
மிகவும் எளிதான இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி, நார்ட்ஜே பந்துவீச்சில் இம்ரான் பட் (12), அபித் அலி (10) ஆகியோர் ஆட்டமிழந்தனர். கப்டன் பாபர் ஆசம் 3 ரன்னில் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.
அசார் அலி 31 ரன்களிலும், பவாத் ஆலம் 4 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்