தென்னாப்பிரிக்க வகை கொரோனா வைரஸ் துபாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைவதை தடுக்கும் வகையில், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து பிரித்தானியா வரும் விமானங்களுக்கு பிரித்தானியா தடை விதித்துள்ளது.
இந்தியா, சவுதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக துபாய்க்கு அதிகம் செல்வது பிரித்தானிய சுற்றுலாப்பயணிகள்தான்.
துபாய்க்கு சுற்றுலா செல்பவர்களில் பிரித்தானியர்கள் 7 சதவிகிதம். சென்ற ஆண்டு கொரோனா தொற்று பரவத்தொடங்குவதற்கு முன், மாதம் ஒன்றிற்கு 100,000 பிரித்தானியர்கள் வரை துபாய்க்கு வந்து சென்று கொண்டிருந்தார்கள்.
அவர்களால் மட்டும் துபாய்க்கு மாதம் ஒன்றுக்கு 34 மில்லியன் பவுண்டுகள் வருவாய் வந்துகொண்டிருந்தது.
இடையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சுற்றுலா வருவாய், அழகழகான மொடல்களும், சமூக ஊடக பிரபலங்களும் வேலை செய்கிறேன் பேர்வழி என்ற பெயரில் துபாயில் தஞ்சமடைய, ஹொட்டல்களில் தங்கும் மக்களின் எண்ணிக்கை 71 சதவிகிதம் உயர்ந்தது.
உலகம் முழுவதும், நாடுகள் எல்லைகளை மூடிக்கொண்டிருந்த நிலையில், புத்தாண்டை சாக்காக வைத்து துபாய் தன் கதவுகளைத் திறந்துவிட, அங்கு கொரோனா பரவ ஆரம்பித்தது.
அங்கிருந்து இந்த மொடல்களும், பிரபலங்களும் புதுவகை கொரோனா வைரஸை பிரித்தானியாவுக்குள் கொண்டுவந்துவிடக்கூடாது என்பதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வரும் விமானங்களுக்கு பிரித்தானியா தடை விதித்துவிட்டது.
பிரித்தானியாவைத் தொடர்ந்து பல நாடுகள் விமான சேவைக்கு தடை விதித்துவிட்டதால், துபாய்க்கு 23 பில்லியன் பவுண்டுகள் வரை இழப்பு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.