அரசாங்கம் ஸ்திரமாக இருப்பதாகவும் எந்த ஸ்திரமற்ற நிலைமையும் காணப்படவில்லை எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பலமிக்க இலங்கை என்ற தொனிப் பொருள் ஊடான அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தை வெளியிட்டு வைப்பதற்காக அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.
எவர் என்ன கூறினாலும் தற்போதைய அரசாங்கம் சிறந்த புரிந்துணர்வுடன் முன்னோக்கி பயணிக்கும்.
சிலர் அரசாங்கத்திற்குள் ஸ்திரமற்ற நிலைமையை உருவாக்க முயற்சித்து வருகின்றனர். அவர்களின் அரசியல் எதிர்காலம் அழிந்து போய்விடும் என்பதால், அவர்கள் அப்படியான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தித்திட்டங்கள் மூலம் மாத்திரம் 10 ஆயிரம் தொழில் வாய்ப்புகள் உருவாகும்.
இந்த திட்டங்களை செயற்படுத்தும் போது தேர்தல்களில் வெற்றி பெறுவது பிரச்சினையாக இருக்காது.
பிராந்திய பொருளாதார அபிவிருத்திக்கான வழியை திறப்பது, உலக உற்பத்தி வலையமைப்பில் இணைதல், வர்த்தகங்களை ஆரம்பித்தல், முன்னேற்றத்திற்கு தேவையான வசதிகளை வழங்குதல், மனித வள முதலீட்டை வலுப்படுத்துவது உட்பட 9 பிரதான யோசனைகளுடன் இந்த திட்டம் வெளியிடப்பட்டுள்ளது எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.