இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) நிர்வாகத்தில் மறுசீரமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் லோதா கமிட்டி பல்வேறு பரிந்துரைகளை தாக்கல் செய்தது.
ஆனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் லோதா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தியது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுப்ரீம் கோர்ட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாக்கூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை பதவி நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டது.
கிரிக்கெட் வாரிய நிர்வாக பதவிக்கு சரியான நபர்களை தேர்வு செய்ய சீனியர் வக்கீல்கள் கோபால் சுப்பிரமணியம், அனில் திவான் ஆகியோரை சுப்ரீம் கோர்ட்டு நியமித்து உள்ளது. வருகிற 19-ந்தேதிக்குள் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக முன்னாள் கேப்டன் கங்குலி நியமிக்கப்பட அதிகமான வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் தற்போது பெங்கால் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக உள்ளார்.
பி.சி.சி.ஐ தலைவர் பதவிக்கு கங்குலியே பொருத்தமானவர் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கருத்து தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கு நான் தகுதியானவன் இல்லை என்று கங்குலி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கு எனது பெயர் தேவையில்லாமல் இழுக்கப்பட்டுள்ளது. நான் அதற்கு தகுதியானவன் இல்லை. பெங்கால் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியை நான் ஏற்று ஒரு ஆண்டு தான் ஆகிறது. இன்னும் 2 ஆண்டுகள் இந்த பதவி இருக்கிறது. கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை.
லோதா கமிட்டி பரிந்துரையை பெங்கால் கிரிக்கெட் சங்கம் அமல்படுத்துவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு கீழ்படிவோம்.
பெங்கால் கிரிக்கெட் சங்க நிர்வாகிகளின் கூட்டம் இன்று நடக்கிறது. இந்த கூட்டத்தில் எதிர்கால திட்டம் குறித்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.