வட கொரியா கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் டோஸ் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியைப் பெற உள்ளது என்று COVAX தடுப்பூசி பகிர்வு திட்டத்தை வழிநடத்தும் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இந்த ஆண்டின் முதல் பாதியில் வட கொரியா கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் டோஸ் AstraZeneca-Oxford கொரோனா தடுப்பூசியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல் உலகின் முக்கிய நாடுகளே தவித்து வருகின்றன.
இதனிடையே, COVAX மையம் இந்திய சீரம் நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசியின் 1.992 மில்லியன் டோஸை விநியோகிக்கும் என்று COVAX இடைக்கால விநியோக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழை நாடுகள் தடுப்பூசிகள் பெறுவதை உறுதிசெய்யும் COVAX-ஐ, GAVI கூட்டணி, உலக சுகாதார அமைப்பு, தொற்றுநோய்களுக்கான தயாரிப்பு கண்டுபிடிப்புகளுக்கான கூட்டமைப்பு மற்றும் ஐ.நா. குழந்தைகள் நிதியம் ஆகியவை இணைந்து செயல்படுத்துகிறது.
உலக சுகாதார அமைப்பின் வலைத்தளத்தின்படி, கொரோனா தொடர்பான ஒரு தொற்றை கூட வட கொரியா இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.