வித்தியா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 10 ஆவது நபரின் விளக்கமறியலை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடித்து யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.
புங்குடுதீவில் மாணவி வித்தியா கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 12 நபர்கள் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் 2015 ஆம் ஆண்டு 12 ஆம் மாதம் 20 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 10 ஆவது எதிரியாக கலகே பேபிகே கமகே ராஜ்குமார் என்ற நபருக்கு கடந்த வருடம் டிசம்பர் மாதத்துடன் ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது.
இதனால் சந்தேகநபரின் விளக்கமறியல் காலத்தை நீடிக்கும்படி அரச சட்டத்தரணி நிசாந்த் நீதிமன்றில் மனு ஒன்று முன்வைக்கப்பட்டது.
1997ஆம் ஆண்டு 30ஆம் பிணைச்சட்டம் 17 ஆம் பிரிவின்படி 10 ஆம் சந்தேகநபரின் விளக்கமறியல் காலத்தை இன்றிலிருந்து மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
எனினும் இது தொடர்பில் சந்தேகநபர் நீதிமன்றில் தெரிவிக்கையில்,
“நான் குறித்த குற்றச் சம்பவத்துடன் தொடர்புபட்டிருக்கவில்லை. அத்தருணத்தில் நான் காரைநகரிலுள்ள வர்த்தக நிலையத்தில் பணியாற்றியிருந்தேன்.
வித்தியாவின் 45ஆம் நினைவு தினத்தின் போது பார்வையிடுவதற்காகவே அங்கு சென்றேன் அத்தருணத்திலேயே புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டேன்.
இன்று நீதிமன்றில் வழக்கு உள்ளது என எனக்கு தெரியாது. சிறைச்சாலை உத்தியோகத்தர்களிடம் நான் வினவியபோதும் அவர்கள் இது தொடர்பில் எனக்கு அறிவிக்கவில்லை அதனால் சட்டத்தரணிக்கோ எனது வீட்டாருக்கோ தெரியப்படுத்தவில்லை.
இதனால் விளக்கமறியலை ஒரு மாதகாலத்திற்கு நீடிக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன்” எனவும் தெரிவித்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி இளஞ்செழியன் சந்தேக நபரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதுடன் விளக்கமறியலை மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடித்ததுடன் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.