இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் மனைவி பலியாகி விட, சடலத்துடன் கணவர் நடத்திய பாசப் போராட்டம் தேனியில் காண்போரை கண் கலங்க வைத்தது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள பி.சி. பட்டியை சேர்ந்த ஜெயராமன் தன் மனைவி ராஜலட்சுமியுடன் பெரியகுளம் நோக்கி நேற்று தன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். வீட்டில் நடக்கவுள்ள நிகழ்வு ஒன்றுக்காக உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க இருவரும் சென்றுள்ளனர். கைலாசபட்டி அருகே இரு சக்கர வாகனம் சென்ற போது, கம்பத்தில் இருந்து பெரியகுளம் நோக்கி சென்ற அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதியது. விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற கணவன், மனைவி கீழே விழுந்தனர். இதில், ராஜலட்சுமி அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கிக் கொண்டார். பேருந்து டயர் ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ராஜலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். தன் கண் முன்னரே மனைவி ரத்த வெள்ளத்தில் பலியாகி கிடப்பதை கண்ட ஜெயராமன் துடி துடித்துப் போனார்.
மனைவியின் உடலை தன் மடியில் கிடத்திக் கொண்டு , ‘தயவு செய்து எழுந்திருமா’ என்று அவர் கதறி அழுதது காண்போரை கண் கலங்க வைத்தது. ராஜலட்சுமியின் உறவினர்களும் சம்பவ இடத்துக்கு வந்து அவரின் உடலைப் பார்த்து கதறி அழுதனர். இதற்கிடையே, அரசு பேருந்தின் ஓட்டுநர் பெரியகுளம் தென்கரை காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். தென்கரை போலீஸார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.