யூடியூபில் பாட்டுப்பாடி வெளியிட்ட வீடியோ மூலம் தான் சம்பாதித்த 1.11 லட்ச ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக அளித்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி தற்போது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி குகிகா சச்தேவ். இவர் தான் பாடிய பாடலை வீடியோவாக பதிவு செய்து தனது யூடியூபில் சேனலில் பதிவேற்றுவது வழக்கம். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இவர் யூடியூபில் பாட்டுப்பாடி பதிவேற்றிய வீடியோ பலராலும் ரசிக்கப்பட்டு இணையத்தில் வைரலானது. அந்த வீடியோ மூலம் அவருக்கு நல்ல வருமானமும் கிடைத்தது. அந்த பணத்தினை அதனை நல்ல நோக்கத்திற்காக பயன்படுத்த வேண்டும் என்று குகிகா கருதினார்.
அதன்படி யூடியூப் வீடியோ மூலம் கிடைத்த ரூ.1.11 லட்சத்தை கொரோனா நிவாரண நிதியாக ஜம்மு காஷ்மீர் மருத்துவ கல்லூரி முதல்வர் மருத்துவர் சாஷி சுதன் ஷர்மாவிடம் தற்போது அளித்துள்ளார். இந்த பணம் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு நிச்சயம் பயன்படும் என்று குகிகா நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தை உணவு தண்ணீருக்கு வழியின்றி தங்கள் சொந்த ஊருக்கு வெறும் கால்களில் நடந்து சென்றது என்னும் அவர்களுக்கு உதவ வேண்டும் என்று தன் மனதில் ஆசை உருவானதாகவு கூறியுள்ளார்.
இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் மருத்துவ கல்லூரி முதல்வர் சுதன் சர்மா கூறுகையில், ”இந்த கடினமான காலத்தில் சிறுமி குகிகாவின் மனிதாபிமான செயல் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இன்றைய இளைய சமுதாயத்திற்கு அவர் சிறந்த முன்னுதாரணமாக மாறியுள்ளார். குகிகாவை போல் இன்னும் நிறைய இளைஞர்கள் கொரோனாவின் தாக்கத்திலிருந்து இந்த சமுதாயம் முற்றிலுமாக மீள உதவ வேண்டும் ” என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.