வட இந்தியாவில் மிகவும் பிரபலமானது தாபா மட்டன். இந்த தாபா மட்டன் கிரேவி சாதம், சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். இந்த வார இறுதியில் உங்கள் வீட்டில் மட்டன் வாங்கினால், அதைக் கொண்டு தாபா ஸ்டைல் மட்டன் கிரேவியை செய்து சுவையுங்கள். இந்த கிரேவி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருப்பதோடு, நாவிற்கு விருந்தளிக்கும் வகையில் அட்டகாசமான ருசியில் இருக்கும்.
உங்களுக்கு தாபா ஸ்டைல் மட்டன் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமானால், கீழே கொடுக்கப்பட்டுள்ள தாபா ஸ்டைல் மட்டன் கிரேவியின் செய்முறையைப் படியுங்கள். அதைப் படித்து முயற்சித்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மட்டன் – 500 கிராம்
* பூண்டு – 5 பற்கள் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
* தயிர் – 3/4 கப்
* சீரகப் பொடி – 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
* கிராம்பு – 4
* எண்ணெய் – தேவையான அளவு
* பச்சை மிளகாய் – 3
* துருவிய இஞ்சி – 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி – சிறிது
* தக்காளி – 2 (நறுக்கியது)
* பிரியாணி இலை – 2
* ஏலக்காய் – 3
* மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் மட்டனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் கழுவிய மட்டனில் தயிர், மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகப் பொடி, மல்லித் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு அகன்ற கனமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அடுத்து ஊற வைத்துள்ள மட்டனை சேர்த்து கிளறி விடவும். பொதுவாக மட்டன் வேகும் போது அது நீர் விடும். அப்படி நீர்விட்டு அந்நீர் சுண்டும் வரை மட்டனை நன்கு வேக வைக்கவும்.
* பின் தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கிளறி, 15-20 நிமிடம் வரை வேக வைக்கவும்.
* பின்பு அதில் தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க வைக்கவும். அதன் பின் கரம் மசாலாவைத் தூவி, மீண்டும் ஒரு 3-4 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், தாபா ஸ்டைல் மட்டன் கிரேவி தயார்.