மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக யாங்கூன் நகரில் 2வது நாளாக ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர்.
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது.
இதில் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கட்சி மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் அந்த நாட்டு ராணுவம் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டியதோடு, தேர்தல் முடிவுகளை ஏற்கவும் மறுத்தது. ஆனால் ராணுவத்தின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றவை என கூறி தேர்தல் ஆணையம் அதை நிராகரித்தது.
இந்த விவகாரத்தில் மியான்மர் அரசுக்கும் அந்த நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், சமீபத்தில் ராணுவம் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றியது. நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை ராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ளது.
அடுத்த ஒரு வருடத்துக்கு நாட்டில் ராணுவ ஆட்சி நடைபெறும் என்றும் அதன் பிறகு தேர்தல் நடத்தப்பட்டு வெற்றியாளரிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படும் என்றும் ராணுவம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே, ராணுவ ஆட்சிக்கு எதிராக அந்த நாட்டின் மக்கள் போர்க்கோலம் பூண்டுள்ளனர். வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்துகின்றனர். ராணுவ ஆட்சிக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கி உள்ளனர்.
அரசு ஊழியர்களும், சுகாதார பணியாளர்களும் நடத்துகிற ஒத்துழையாமை இயக்கத்தில் பல தரப்பினரும் சேர்ந்து வருகின்றனர். இது ராணுவ ஆட்சிக்கு தலைவலியாக மாறி வருகிறது.
இதனை தொடர்ந்து மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக யாங்கூன் நகரில் 2வது நாளாக ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர்.
மியான்மரின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான யாங்கூனில் மக்கள் பெருந்திரளாக கூடி, ராணுவ ஆட்சிக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். ஆங் சான் சூ கி உள்ளிட்ட தலைவர்களை விடுதலை செய்யவும் வலியுறுத்தினர்.