இதற்கு கண்டனம் தெரிவித்த தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், நடிகர் விஷாலை தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு கடந்த 2-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல், ‘நடிகர் விஷால் தான் தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்தால், அவரை இடைநீக்கம் செய்த உத்தரவு மறுபரிசீலனை செய்யப்படும்’ என்று கூறினார். இதற்கு விஷால் தரப்பு கருத்தை கேட்டு தெரிவிக்கும்படி அவரது வக்கீலுக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, விஷால் சார்பில் வருத்தம் தெரிவித்து ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘வார பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் யாருடைய மனதையும் புண்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் கருத்து தெரிவிக்கவில்லை. என் மனதில் பட்ட தனிப்பட்ட கருத்துக்களை மட்டுமே தெரிவித்து இருந்தேன். எனவே, என்னுடைய கருத்து யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால், அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடைய இந்த மனுவை ஏற்றுக்கொண்டு, ஐகோர்ட்டு தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கு மீதான தீர்ப்பை 6-ந் தேதி (நாளை) பிறப்பிப்பதாக உத்தரவிட்டார்.