‘இருமுகன்’ படத்திற்கு பிறகு ‘வாலு’ பட இயக்குநர் விஜய் சந்தர் படத்தில் நடித்து வரும் விக்ரம், அடுத்ததாக கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த வாரம் குன்னூரில் துவங்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
‘துருவ நட்சத்திரம்’ படத்தை உலக தரத்தில் எடுக்க கவுதம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. தற்போது கவுதம் மேனன் – விக்ரம் கூட்டணி துபாயில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’கை உருவாக்கி வருகின்றனர். இதற்காக உலகின் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு கவுதம் மேனன் அழைப்பு விடுத்திருக்கிறாராம்.
படத்தின் முக்கால்வாசி பாகத்தில் ‘சால்ட் அன்ட் பெப்பர்’ லுக்கிலும், பிளாஷ்பேக்கில் இளமையான தோற்றத்திலும் விக்ரம் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விக்ரம் – கவுதம் மேனன் இணையும் முதல் படம் என்பதால் ரசிகர்களிடையே இப்படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ‘காற்று வெளியிடை’ அதிதி ராவை நடிக்க வைக்க படக்குழு முயற்சித்து வருகிறதாம். விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.