அமெரிக்காவில் உள்ள உட்டா மாகாணத்தில் 2 வயதான இரட்டையர்கள் தங்களது பெற்றோருடன் வசித்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு வீட்டில் உள்ள படுக்கை அறையில் இரட்டையர் இருவரும் விளையாடிக்கொண்டு இருந்தபோது இழுப்பறை மீது ஏறியுள்ளனர்.
அப்போது இழுப்பறை திடீரென சாய்ந்தது. இதில் இரட்டையர்களில் ஒருவர் இழுப்பறைக் கீழ் சிக்கி வலியால் கதறியுள்ளார். இதனை கண்ட மற்றொரு சகோதரன் அவனை காப்பாற்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
பல வழிகளில் தீர்வு காண முயன்று தோல்வி அடைந்ததால், வெறும் கைகளால் இழுப்பறையை தூக்க முயற்சி செய்துள்ளார்.
பின்னர் அதுவும் முடியாத காரணத்தினால் இழுப்பறையை பலம் கொண்டு முன்னே தள்ளியுள்ளான். இச்சூழலை பயன்படுத்திக்கொண்ட கீழே இருந்த சகோதரன் இழுப்பறையில் இருந்து உருண்டு வெளியே தப்பி விடுகிறான். இந்த சம்பவம் படுக்கை அறையில் உள்ள கேமராவில் பதிவாகியது.
இக்காட்சிகளை பெற்றோர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். வீட்டில் வைக்கப்படும் பொருட்கள் மீது மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும், அவை குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தாக மாற வாய்ப்புள்ளது எனவும் எச்சரிக்கை செய்தியுடன் பதிவிட்டுள்ளனர்.