சர்வதேசத்தில் அரசாங்கத்தின் விளையாட்டு செல்லுபடியாகாது என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் வேலுகுமார் மேலும் கூறியுள்ளதாவது, “வெளிநாடுகளுக்கு தேசிய சொத்துக்களை விற்பதற்கு நாம் ஒருபோதும் ஆதாரவளிக்க மாட்டடோம்.
ஆனால் இராஜதந்திர தொடர்புகளை சுமூகமாக பேண வேண்டியது அத்தியாவசியமாகும். எனினும் அரசாங்கம் அதனை முறையாக பேணுவதாகத் தெரியவில்லை. ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சிடமும் அரசாங்கம் பின்பற்றும் வெளிநாட்டு கொள்கை என்ன என்று வினவுகின்றோம்.
இதேவேளை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அதிக பலத்தைக் கொண்டுள்ள அரசாங்கத்திற்கு வெறும் 20 கம்பனிகளை கட்டுப்படுத்த முடியாதா?
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளம் பெற்றுக் கொடுக்கப்படும் என்று கூறிய உடனேயே பெருந்தோட்ட கம்பனிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. அரசாங்கமும் கம்பனிகளுடன் இணைந்தே செயற்படுகின்றது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
இதேவேளை இலங்கைக்குள் அரசாங்கம் எவ்வாறு வேண்டுமானாலும் விளையாடலாம். ஆனால் ஜெனிவாவிலும் அதே விளையாட்டை காண்பிக்க முடியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.