யாழ். ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் சாவகச்சேரியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் உள்ளிட்ட ஐவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் அருவிக்கு மேலும் தெரிவிக்கையில்,
இன்றைய தினம் (பெப்-16) யாழ். பல்கலைக் கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 376 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.
அதன் முடிவுகளின் அடிப்படையில் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட இருவரும் சங்குப்பிட்டி வீதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்கள்.
மன்னாரைச் சேர்ந்த ஒருவருக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கும் இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அருவி இணையத்திற்கு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்ட ஆசிரியை பூநகரியில் உள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட 444 பேரின் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று உறுதி செய்யப்பட்ட மூவரும் கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.