“என் தந்தையை கொலைசெய்தவர்களை மன்னித்துவிட்டேன், அவர்கள் மீது எனக்கு கோபமில்லை” என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் புதுச்சேரியில் பாரதிதாசன் அரசு கல்லூரிக்கு சென்ற அவர், மாணவிகளின் கேள்விக்கு பதிலளித்த போது இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,
எனது தந்தையை இழந்தது என் இதயத்தை பிழந்தது போல் இருந்தது. உங்களில் யாரேனும் தந்தையை இழந்திருந்தால் எனது வலி உங்களுக்கு தெரியும். என் தந்தையை கொன்றவர்களை மன்னித்துவிட்டேன், அவர்கள் மீது கோபமில்லை என்று தெரிவித்தார்.
“நீங்கள் என்னை சார் என்று அழைக்க வேண்டாம். கல்லூரியின் முதல்வர், ஆசிரியர்களை சார் என்று அழையுங்கள். என்னை ராகுல் சார் என்று அழைக்க வேண்டாம்.
ராகுல் அண்ணா என்று வேண்டுமானால் கூப்பிடுங்கள். ராகுல் காந்தியின் அழைப்பை அடுத்து அவரை ராகுல் அண்ணா என்று கல்லூரி மாணவிகள் அழைத்து உற்சாகமாக கலந்துரையாடினார்கள்.
இதேவேளை, தமிழ்நாட்டில் 1991ஆம் ஆண்டு மே மாதம் ராகுல் காந்தியின் தந்தையும் இந்திய முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்.
அவரை விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் கொலை செய்ததாக நடந்த வழக்கில் சாந்தன், நளினி, முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோர் ஆயுள் சிறை தண்டனை காலம் முடிந்த பிறகும் சிறையில் உள்ளனர்.
அவர்களின் விடுதலைக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் பரவலாக கோரிக்கைகள் வலுத்து வரும் வேளையில், தமிழ்நாட்டில் ஆளும் அதிமுக அரசும், எதிர்கட்சியான திமுகவும் அந்த கோரிக்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளன.
ஆனாலும், இது தொடர்பாக குடியரசு தலைவரே இறுதி முடிவு எடுப்பார் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
இந்தப் பின்னணியில், புதுச்சேரி வந்துள்ள ராகுல் காந்தி தனது தந்தையை கொன்றவர்களை மன்னித்து விட்டதாக தெரிவித்திருப்பது முக்கியத்துவதைத் பெற்றிருக்கிறது.