பார்த்திபனின் இயக்கத்தில், சாந்தனு கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர், டிரைலர் தமிழக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ஜனவரி 14-ம் தேதி ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தை வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் பார்த்திபன் தன்னை ரகசியமாகக் கண்காணித்து வந்ததாக நடிகர் சாந்தனு தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில் “பார்த்திபன் சார் என்னை ஒரு நாள் அழைத்து, ‘நான் கோடிட்ட இடங்களை நிரப்புக’ என்கின்ற படத்தை இயக்குகிறேன். அதில் நீ தான் கதாநாயகன். நாளை முதல் படப்பிடிப்பு’ என்று கூறினார்’.
ஆரம்பத்தில் எனக்கு சற்று மகிழ்ச்சி கலந்த ஆச்சரியமாக இருந்தாலும், பார்த்திபன் சார் மீதும், அவருடைய கதை மீதும் நான் வைத்திருக்கும் ஆணித்தரமான நம்பிக்கையால், என்ன கதை என்பதை கூட கேட்காமல், படப்பிடிப்புக்கு தயாராகி விட்டேன். சிறிது நாட்களுக்கு பிறகு தான், பார்த்திபன் சார் என்னை இந்த படத்திற்காக ரகசியமாக கண்காணித்து வந்தார் என்பதைத் தெரிந்து கொண்டேன்.
ஒரு திரைப்படத்தில் வழக்கமாக இருக்கும் அம்சங்களை மாற்றி, ஒரு வித்தியாசமான திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்குபவர் பார்த்திபன் சார். அவருடன் இணைந்து பணியாற்றியது எனக்கு அளவுகடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. நிச்சயமாக ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தின் மூலம், ரசிகர்கள் ஒரு புதிய சாந்தனுவை காண்பார்கள்” என்றார்.