கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டாலும் சுகாதாரத் துறையினர் வழங்கியுள்ள அறிவுரைகளைத் தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும். இல்லையேல் மீண்டும் தொற்று ஏற்படும் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பிரதம தொற்று நோயியல் மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் இதை குறிப்பிட்டார். மேலும் தெரிவிக்கையில்,
“பொதுவாக தலைவலிக்கு நிவாரணியாக ‘பனடோல்’ பெற்றுக்கொள்ளப்படுகின்றது. அதற்காக எல்லோருக்கும் தலைவலி குணமடைவதில்லை. அதேபோன்று தான் தடுப்பு மருந்தும்.
தடுப்பு மருந்துகளில் ‘அசிட்டெசிட்’ என்ற பொருள் காணப்படுகின்றது. அது இத்தடுப்பு மருந்திலும் உள்ளது.
அப்பொருள் ஒரு சிலருக்கு 78முதல் – 80 வீதம் செயற்படாது. அதனால் அவ்வாறானவர்களுக்கு இத்தொற்று ஏற்படலாம். ஆகவே தான் இத்தடுப்பூசியைப் பெற்றாலும் சுகாதாரத் துறையினர் வழங்கியுள்ள அறிவுரைகளைத் தொடர்ந்தும் பின்பற்ற வேண்டுமென வலியுறுத்துகின்றோம்.
அதேநேரம் இத்தடுப்பூசி வழங்கப்படும் தினத்தில் அதனைப் பெற்றுக்கொள்பவரின் உடலில் இவ்வைரஸ் உள்ளதா? இல்லையா? என்பது தொடர்பில் பரீட்சிக்கப்படுவதில்லை. உடலில் எதுவித நோய் நிலையும் இல்லாதவர்களுக்கு தடுப்பூசி வழங்குகின்றோம்.
ஆனால் இந்நாட்டில் அடையாளம் காணப்படுகின்ற கொவிட் 19 தொற்றாளர்களில் அனேகருக்கு இத்தொற்றுக்கான அறிகுறிகள் வெளியே தென்படுபவதில்லை. அதனால் இத்தடுப்பு மருந்தைப் பெறும் போது ஒரிருவரது உடல்களில் நாமறியாத வகையில் இவ்வைரஸ் காணப்பட்டிருக்கலாம்.
அதன் விளைவாக இத்தடுப்பூசியைப் பெற்ற பின்னர் இத்தொற்றுக்கான நோய் நிலை ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இத்தடுப்பூசி செலுத்தப்பட்டு அது உடலில் செயற்பாட்டு நிலையை அடையவும் குறிப்பிடத்தக்க நேரம் தேவை. அதற்கு போதிய காலம் கிடைக்கப்பெறாததன் விளைவாகவும் இத்தொற்று ஏற்படின் நோய்க்கான அறிகுறிகள் வெளிப்படலாம்.
அதாவது ஒருவர் இத்தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொண்டதும் அவரது உடலில் இத்தொற்றுக்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தி உருவாகி பலமடையும். இதற்கு இரண்டு வாரங்கள் முதல் சிறிது காலம் தேவைப்படும்.
இடைப்பட்ட காலப்பகுதியில் உடலில் இவ்வைரஸ் காணப்படுமாயின் இந்நோய் ஏற்பட முடியும். மற்றப்படி இத்தடுப்பு மருந்தில் பிரச்சினைகள் இல்லை. தடுப்பு மருந்து பெற்றுக்கொள்பவரின் உடல் நிலைமைக்கு ஏற்பவே அதன் செயற்பாடு அமைகின்றது” என்றார்.
மேலும், “தடுப்பு மருந்து பெறுபவர்களுக்கு காய்ச்சல், உடல் வலி போன்ற பக்க விளைவுகள் ஏற்படுவது சாதாரணமான விடயம். அந்த வகையில் கடந்த ஜனவரி 29 முதல் இற்றை வரையும் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு இத்தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒரு சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் எவருக்கும் கடுமையான ஒவ்வாமை போன்ற பக்க விளைவுகள் ஏற்பட்டதாக இற்றைவரையும் பதிவுகள் இல்லை. ஆகவே யாரும் தடுப்பூசி தொடர்பில் அச்சம் கொள்ளத்தேயைில்லை” என்றார்.