கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடந்து வருவதால் அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதிக்குள் இயல்பு நிலை திரும்பும் என ஜனாதிபதி ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஜோ பைடன் மிக்சிகன் மாகாணத்தில் உள்ள பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி உற்பத்தி ஆலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் தடுப்பூசியின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை அதிகப்படுத்த பைசர் நிறுவன அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த ஜோ பைடன் கூறியதாவது:-
இந்த ஆண்டு இறுதிக்குள் நாம் இயல்பு நிலையை அடைவோம் என்று நான் நம்புகிறேன். கடவுள் விரும்பினால் இந்த கிறிஸ்துமஸ் கடந்த கிறிஸ்துமசை விட வித்தியாசமாக இருக்கும்.
அதே சமயம் உங்களிடம் அந்த உறுதிப்பாட்டை என்னால் தர முடியாது. ஏனெனில் வைரசின் பிற வடிவங்கள் உள்ளன. உற்பத்தி விகிதங்களின் அடிப்படையில் என்ன நடக்கும் என்று எங்களுக்கு தெரியாது. விஷயங்கள் மாறலாம் ஆனால் நாம் செய்ய வேண்டும் என்று விஞ்ஞானம் சுட்டிக்காட்டிய அனைத்தையும் நாம் செய்கிறோம்.
அதேசமயம் இந்த வாரம் அமெரிக்காவில் பெரும்பாலான பகுதிகளை கடும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தடுப்பூசி வினியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடி எப்போது முடிவடையும் என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்க முடியாது. ஆனால் நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருவதற்கான எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறோம். எனது நிர்வாகம் உயிரை காப்பாற்றுவதற்கு வாழ்க்கையை சிறப்பாக மாற்றுவதற்கும் அறிவியலால் வழிநடத்தப்படுகிறது எனத் தெரிவித்தார்.