தமிழக அரசியல் தற்போது பரபரப்பான ஒரு சூழ்நிலையில் நகர்ந்துகொண்டிருக்கின்றது. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றே கூறவேண்டும்.
முதலமைச்சர் பதவியில் மாற்றம், அதிமுக கட்சி தலைமையில் மாற்றம் மத்திய அரசின் அரசியல் காய் நகர்தல்கள் என தமிழக அரசியல் பயணித்துக்கொண்டிருக்கின்றது.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், தமிழகத்தில் ஆழும் கட்சியாக இருக்க கூடிய அதிமுக கட்சியின் பொது செயலாளராக வீ.கே.சசிகலா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
எனினும், அவரின் தலைமையை பல லட்சம் அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. சசிகலாவின் பதாதைகள் கிழிக்கப்படுவதும், சானம் வீசி தாக்கப்படும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், அதிமுக அமைப்பின் தலைமை பதவியை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை ஏற்குமாறு ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை தி.நகரில் அமைந்துள்ள சிவஞானம் வீதியில் அமைந்துள்ள தீபாவின் வீட்டுக்கு முன்னால் அதிமுக தொண்டர்கள் ஒன்று திரண்டு தீபாவுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று தொண்டர்கள் முன் தீபா பேசியிருந்தார். அத்துடன், வீட்டு மாடியில் இருந்து இரட்டை விரலை அசைத்து காட்டினார்.
தொடர்ந்து பேசிய தீபா, அம்மாவின் தியாகங்களையும், புகழையும் காப்பாற்ற வேண்டிய கடமை தமக்கு இருப்பதாகவும், உங்களுக்காக தான் பணியாற்ற காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது அதிமுக தொண்டர்கள் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டிருந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தீபாவின் குரல், செயற்பாடுகள் அனைத்தும் அப்படியே, அம்மாவை (ஜெயலலிதா) போன்று இருப்பதாக தொண்டர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, தீபாவின் உருவமும், குரலும், ஜெயலலிதாவை போன்று இருப்பதன் காரணமாக அதிமுக அமைப்பின் வாக்கு வங்கயான அடிமட்ட பெண்களிடம் பெரும் ஈர்ப்பை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.