இலங்கை கடற்படை யினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சசிகலா கூறியுள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4.1.2017 அன்று நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இரண்டு மீனவர்களுக்கு சொந்தமான மீன்பிடி படகுகளை கைப்பற்றிக் கொண்டு, அப்படகுகளில் இருந்த 10 மீனவர்களை சிறை பிடித்துச் சென்றுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 584 படகுகளில் கச்சத்தீவை ஒட்டியுள்ள இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை விரட்டியடித்து உள்ளனர். அவர்களின் மீன்பிடி வலைகளையும் அறுத்து எரிந்துள்ளனர். அன்றாட வயிற்றுப் பிழைப்புக்காக அலைகடலில் சொல்லொண்ணா இன்னல்களுக்கு இடையே மீன்பிடிப்பில் ஈடுபடும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து துன்புறுத்தி வருவது கண்டிக்கத்தக்கது.
பன்னெடுங்காலமாகவும், தலைமுறை தலைமுறையாகவும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் தமிழக கடலோர மாவட்ட மீனவர்களுக்கு, அவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடி உரிமையை பாதுகாத்துத் தர வேண்டிய பெரும் பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. இந்திய நாட்டின் ஒரு பகுதியாக விளங்கிய கச்சத் தீவினை முன் யோசனை இன்றி இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்ததன் விளைவாகவே இந்திய மீனவர்கள் இத்தகைய தொடர் தாக்குதலுக்கும், இழப்புக்கும் ஆளாகி வருகின்றனர்.
இந்திய மீனவர்கள், அதாவது தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் 51 பேர் இலங்கை சிறைகளில் இன்னமும் அடைக்கப்பட்டு இருக்கின்றனர்; அவர்களுக்குச் சொந்தமான பல லட்சம் மதிப்புள்ள ஏராளமான படகுகள் இலங்கை கடற்படையால் பிடித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் பல்லாயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
ஏழை, எளிய மக்களாக வாழ்ந்து வரும் பெரும்பாலான மீனவர்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளுக்காகத் தான் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்களை இத்தனை இன்னல்களுக்கு ஆட்படுத்துவது முற்றிலும் மனிதாபிமானத்திற்கு எதிரான கொடுஞ்செயல். இதனை எண்ணிப் பார்த்து தமிழக மீனவர்களை உடனடியாக இலங்கை அரசு விடுதலை செய்ய வேண்டும். அவர்களது வாழ்வாதாரத்திற்கு அடிப்படையான மீன்பிடிப் படகுகளையும் அவர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
தமிழர்களின் பாரம்பரிய திருநாளான பொங்கல் திருநாள் விரைவில் வர உள்ளது. ஊரெங்கும் பொங்கல் திருநாள் நடைபெற உள்ள இந்த வேளையில், மீனவர் குடும்பங்களில் தலைவனும், பிள்ளைகளும் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு அல்லல்படும் சோகம் சூழ்ந்திருக்க வேண்டுமா?
எனவே, மீனவர் குடும்பப் பெண்களின்; குழந்தைகளின் கண்ணீரைத் துடைக்கும் வகையில் இலங்கை அரசு உடனடியாக இந்திய மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்றும், அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும், வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.