தமிழகத்தில் எந்தத் தொகுதியில் சசிகலா போட்டியிட்டாலும், அங்கு போட்டியிடுவேன் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆட்சி நிர்வாகத்தை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் கவனித்து வருகிறார்.
சசிகலாவை பிடிக்காதவர்கள் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வரவேண்டும் என்று அழைக்கின்றனர்.
ஜெ.தீபா பேரவையையும் தொடங்கியுள்ளனர்.
தியாகாராய நகர் பகுதியில் உள்ள தீபாவின் வீட்டுப் பக்கம் அவரது ஆதரவாளர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
தன்னை சந்திக்க வருபவர்களிடம் நன்றி கூறி பேசும் தீபா, இன்னும் மூன்றே வாரத்தில் முடிவை அறிவிப்பேன் என்றும் கூறி அனுப்பி வைக்கிறார்.
சசிகலா முதல்வர் ஆனாலும், பதவியில் நீடிக்க வேண்டுமென்றால் எம்.எல்.ஏ ஆக வேண்டும். அவர் எங்கு போட்டியிட்டாலும், அங்கு போட்டியிடுவேன்.
சாதி அரசியல் என்பதெல்லாம் இங்கு எடுபடாது. ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள் என்றும் தீபா கூறி வருகிறார்.
ஜெயலலிதாவின் இரத்த உறவான என்னை மக்களும் தொண்டர்களும் ஏற்றுக் கொள்வார்கள். சசிகலாவின் சமூகத்து மக்களுக்கும் நான் யார் என்பது தெரியும். அவர்களும் என்னை ஆதரிப்பார்கள்.
இரட்டை இலை சின்னத்தினால் மட்டும் சசிகலா வெற்றி பெற முடியாது. பெண்கள் ஆதரவு முழுமையாக எனக்கு இருக்கிறது.
இரட்டை இலை சின்னம் ஒரு பிரச்னையே இல்லை. தலைமைக்குத்தான் ஓட்டு கிடைக்கும்.
பென்னாகரத்தில் இரட்டை இலை சின்னத்துக்கு டெபாசிட் பறிபோனதும் மதுரை மேற்கில் தே.மு.தி.கவோடு திணறிய காலமும் உண்டு.
தேர்தல் களத்தில் மூன்றாவது இடத்துக்குத்தான் தள்ளப்படுவார். அதிகாரத்தையும் பலத்தையும் மீறி மக்கள் ஆதரவில் வெற்றி பெறுவேன்.
அரவிந்த் கெஜ்ரிவால் ஷீலா தீட்சித்தைத் தோற்கடித்ததைப் போல, சசிகலாவை தோற்கடிப்பேன்.
அதிகாரத்துக்குள் அவர் காலடி எடுத்து வைக்கும்போது, என்னுடைய முடிவை அறிவிப்பேன் என்றும் தீபா கூறியுள்ளார்.
ஜெயிப்பது ஜெ. தீபாவா? சசிகலாவா? காலம்தான் பதில்சொல்லும்.