கடந்த சில நாட்களாக கோவிட் -19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார். இதன்படி, நாட்டில் நாளாந்தம் பதிவாகும் கோவிட் – 19 தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
“கடந்த வாரம், நாளாந்தம் சுமார் 900 கோவிட் – 19 வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வாரம், அந்த எண்ணிக்கை சுமார் 500 ஆக குறைந்துள்ளது. இது சில முன்னேற்றமாக காணப்படுகின்றது” என கூறியுள்ளார்.
தொற்றுநோயைக் கட்டுக்குள் கொண்டுவர பொதுமக்கள் அதிகாரிகளுடன் ஒத்துழைத்தால் நாம் நிலையான முன்னேற்றத்தை அடைய முடியும்.
இந்த விடயத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு, எங்களது முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம்,” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைவடைந்தமையினால் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் திடீரென குறைவடைந்துள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.
பல இடங்களில் PCR பரிசோதனைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் எடுக்கப்பட்ட PCR பரிசோதனைகள் முடிவுகள் இன்னமும் வெளியாகவில்லை.
3 – 10 நாட்களுக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகள் இன்னமும் கிடைக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.