தொழிலதிபர் நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு லண்டன் உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து நீதிபதி சாமுவேல் கூஸ் வெளியிட்டுள்ள தீர்ப்பில், “ நிரவ் மோடி நாடு கடத்தப்பட்டால் அவருக்கு பாதுகாப்பு இல்லை என்ற வாதத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை. இந்தியாவில் நீதி விசாரணை சுதந்திரமானது.
நாடு கடத்தப்பட்டால் நிரவ் மோடி மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்படுவார் எனவும் அவருக்கு உரிய உணவு, மருத்துவ உதவி வழங்கப்படும் என்றும் இந்திய அரசு உறுதியளித்துள்ளது. இதனை நீதிமன்றம் ஏற்கிறது.
சிறையில் அடைக்கப்பட்டால் மனநலம் பாதிக்கப்படும் என்ற நிரவ் மோடியின் வாதத்தில் எந்த நியாயமும் இல்லை. எனவே அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த எந்த தடையும் இல்லை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வைர வியாபாரி நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுவிட்டு திருப்பிச் செலுத்தாமல் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரியில் இந்தியாவில் இருந்து பிரித்தானியாவுக்கு தப்பிச் சென்றார்.
இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐயும், அமுலாக்கத் துறையும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இதனிடையே நிரவ் மோடி கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் லண்டனில் கைது செய்யப்பட்டார்.
அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தி வருவதற்கான முயற்சிகளை அமலாக்கத் துறை மேற்கொண்டுள்ளது. அவரை நாடு கடத்தும் வழக்கு அங்குள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
வழக்கில் ஜாமீன் கேட்டு நிரவ் மோடி பலமுறை தாக்கல் செய்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இந்த வழக்கின் இறுதிகட்ட வாதங்கள் கடந்த மாதம் 8ஆம் திகதி நடைபெற்றன. இந்நிலையிலேயே மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.