எல்லை பகுதியில் போர் நிறுத்தம் உட்பட அனைத்து ஒப்பந்தங்களையும் தவறாமல் கடைப்பிடிக்க இந்தியா – பாகிஸ்தான் இராணுவம் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்தியா – பாக்கிஸ்தான் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தங்கள் மீறப்படுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இரு நாட்டு இராணுவ செயற்பிரிவு இயக்குனர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து இரு தரப்பினரும் இணைந்து அறிக்கை வெளியிட்டனர். குறித்த அறிக்கையிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி, “இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை கட்டுப்பாட்டு பகுதி உட்பட பிற பகுதிகளின் தற்போதைய நிலை குறித்து இரு தரப்பினரும் வெளிப்படையான, சுதந்திரமான ஆய்வை நடத்தினர்.
இதன் முடிவில் எல்லை கட்டுப்பாட்டு பகுதி உட்பட எல்லையின் பிற பகுதிகளிலும் போர் நிறுத்த ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பிற புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தவறாமல் கடைப்பிடிக்க இரு தரப்பும் சம்மதம் தெரிவித்துள்ளன.
ஏதாவது கருத்து வேறுபாடு ஏற்பட்டு நிலைமை கைமீறிப் போகும் பட்சத்தில் தற்போதுள்ள எல்லை கொடி கூட்டம் நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர இருதரப்பும் சம்மதித்துள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாகிஸ்தான் அதிகாரிகளுடன் கடந்த சில மாதங்களாக நடத்தி வந்த பேச்சுவார்த்தையின் வாயிலாக இந்த சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் குறித்த முடிவுக்கு ஜம்மு – காஷ்மீரைச் சேர்ந்த அரசியல் கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன