இலங்கை எழுப்பிய ஆட்சேபனைகளையும் மீறி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின் பரிந்துரைகளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் அமுல்படுத்தவுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான துணை உயர் ஸ்தானிகர் நாடா அல்-நஷீப் இதனை தெரிவித்துள்ளார்
கடந்த புதன்கிழமை சபையில் முறையாக தாக்கல் செய்யப்பட்ட மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செய்ல் பெச்லெட்டின் அறிக்கையானது, இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் திருத்தம் செய்யப்பட்டே தாக்கல் செய்யப்பட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில் முன்மொழியப்பட்ட பரிந்துரைகளில் இலங்கை அரசாங்கம் மாற்றங்களை எழுப்பியதன் காரணமாக இறுதி ஆவணம் மூன்று வாரங்கள் தாமதமானது என்றும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையுடன் செயற்படும் போது சிரியா, மியான்மர் அல்லது வட கொரியா ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகள் அல்லது முற்றிலும் புதிய உள்ளமைவு போன்ற உத்திகளை பரிசீலிக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பொறுப்புக்கூறல் செயல்பாடுகளை மேற்கொள்வதற்கான சிறந்த உத்தி எது என்பதை தீர்மானிப்பது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு உள்ளது என்றும் நடா அல்-நஷிப் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையுடன் இலங்கை தொடர்ந்து ஈடுபடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.