படைத்தவனே பறித்துக்கொண்டான். தந்தவனே எடுத்துக் கொண்டான் என்ற பாடல் வரிகள்தான் எங்கள் அரசாங்கத்தை நினைக்கும் போது ஞாபகத்திற்கு வரும்.
சர்வதேச சமூகத்தை தாக்காட்டும் பொருட்டு விசாரணை ஆணைக்குழுக்கள், செயலணிகள் என்பவற்றை அமைப்பது, பின்னர் அந்த குழுக்கள் சமர்ப்பிக்கும் அறிக்கைகளை அப்படியே கிடப்பில் போடுவது அல்லது நிராகரிப்பது என்பன வழமையான செயற்பாடுகள் தான்.
இந்த வகையில் நல்லிணக்கம் தொடர்பான மக்கள் கருத்தறியும் செயலணி ஒன்று நாடு பூராகவும் சென்று மக்களின் கருத்துக்களை கேட்டறிந்தது.
இவ்வாறு கேட்டறிந்த கருத்துக்களின் அடிப்படையில், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கும் பொறிமுறையில் கலப்பு நீதிமன்றம் ஒன்று அமைக்கப்படுவது அவசியம் என்றும்,இதில் உள்நாட்டு நீதிபதிகளுடன் சர்வதேச நீதிபதிகளும் இடம் பெறுவது கட்டாயம் ஆகும் என்றும் தனது பரிந்துரையை அரசுக்கு முன் மொழிந்திருந்தது.
எனினும் இப்பரிந்துரையை அரசாங்கம் நிராகரிப்பதாக இப்போது அறிவித்துள்ளது.
மக்களின் கருத்தறியும் செயலணியை உருவாக்கிய அரசாங்கம் அச்செயலணியின் பரிந்துரைகளை அடியோடு நிராகரிக்கிறது எனில், தான் விரும்பாத பரிந்துரைகளை செயலணி முன்வைத்துள்ளது என்பதே பொருளாகும்.
அப்படியானால், மக்களின் கருத்துக்களை கேட்டறிந்தாலும் எந்தப் பரிந்துரை அரசுக்கு பிடிக்குமோ! அதனைப் பரிந்துரை செய்தால் மட்டுமே அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்பது உறுதியாயிற்று.
ஆக, ஆணைக்குழுக்கள், செயலணிகள் என அரசாங்கத்தால் நியமிக்கப்படும் குழுக்கள் உலக நாடுகளை சமாளிப்பதற்கானதே அன்றி வேறில்லை என்பது உணர்தற்குரியது.
இது ஒருபுறம் இருக்க, 2016ம் ஆண்டின் இறுதிக்குள் தீர்வு கிடைக்கும் என்று உறுதிமொழி தந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது உறுதிமொழியை தளர்த்தி அடுத்த தீபாவளிக்குள் தீர்வு என்றார்.
சரி, அடுத்த தீபாவளிக்கு ஒரு வருடந்தானே இருக்கிறது. ஒரு பெரும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஒருவருட காலத்தை அவகாசமாக கொடுப்பதில் அதிக கஷ்டம் இருக்காது என்று விட்டால், 2017ம் ஆண்டின் முற்பகுதியிலேயே கலப்பு நீதிமன்றமும் சர்வதேச நீதிபதிகளின் பங்கேற்பும் அரசாங்கத்தால் நிராகரிக்ப்பட்டுள்ளன.
மக்கள் கருத்தறியும் செயலணியை உருவாக்கி அந்த செயலணி மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து அதிலிருந்து சில பரிந்துரைகளை கூறும் போது, அதனை இருகரங்கூப்பி ஏற்று அமுல்படுத்துவதே நல்லாட்சிக்கு அழகு.இதைவிடுத்து கலப்பு நீதிமன்றம், சர்வதேச நீதிபதிகளின் பங்கேற்பு என்பவற்றை அடியோடு நிராகரிப்பது என்றால்; போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது மகா மடமைத்தனம் என்றாகிவிடும்.
ஆக, தமிழ் மக்களின் உரிமைக்காக போராடிய விடுதலைப் புலிகள் இல்லாத போது தமிழ் மக்களுக்கான உரிமையை இலங்கையின் எந்த ஆட்சியாளர்களும் தரமாட்டார்கள் என்பதே உண்மை.
இந்த உண்மை ஒவ்வொரு வடிவங்களில் ஒவ்வொரு கோலங்களில் வெளி வருகின்றது என்பதே யதார்த்தம்.
இருந்தும் எங்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கொழும்புத் தலைமை, தமிழ் மக்களிற்கு உரிமை கிடைக்கும் என நம்புகிறது.என்ன செய்வது?
அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தில் சிறுபான்மைத் தமிழ் மக்களின் உரிமைகள், அதிகாரங்கள் உறுதி செய்யப்படவில்லை.
இதே போல் போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகளின் பங்கேற்புக்கும் இடமில்லை என்றபோது தமிழன் இழந்ததைத் தவிர அவனுக்கு வேறு எதுவும் கிடைக்காது என்பது சர்வ நிச்சயமாகிறது.
இதை எங்கும் எவ்விடத்திலும் சத்தியம் செய்ய நாம் தயார்.