வறுமையை ஒழிப்பதில் சீனா வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி ஷி ஜின்பிங், பெருமிதமாக தெரிவித்துள்ளார்.
சீனாவில் கடந்த 40ஆண்டுகளாக வறுமையில் பாதிக்கப்பட்டிருந்த 77 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டு, வறுமைக்கு எதிரான போராட்டத்தில் சீனா முழுமையான வெற்றியை அடைந்துள்ளது. இதுகுறித்து ஷி ஜின்பிங் கூறுகையில்,
‘உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில், முழுமையாக வறுமை ஒழிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள அனைத்து ஏழை மக்களும் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம், ஐ.நா.வின் வறுமை ஒழிப்பு இலக்கான 2030ஆம் ஆண்டு காலக்கெடுவைவிட 10 ஆண்டுகளுக்கு முன்னதாக சீனா இலக்கை அடைந்துள்ளது.
கடந்த எட்டு ஆண்டுகளில், தற்போதைய வறுமைக் கோட்டின் கீழ் வாழும், கடைசி 9.89 கோடி கிராமப்புற மக்கள் அனைவரும் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். வறுமை பட்டியலில் இருந்து 832 மாவட்டங்களும் 1,28,000 கிராமங்களும் நீக்கப்பட்டுள்ளது.
1970ஆம் ஆண்டில் இருந்து 77 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். இதே காலகட்டத்தில் உலகளாவிய வறுமைக் குறைப்பில் 70 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை சீனா வழங்கியுள்ளது.
இத்தகைய சாதனைகள் மூலம், சீனா மற்றொரு அதிசயத்தை’உருவாக்கியுள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளில் வறுமை ஒழிப்புக்காக சுமார் 24,600 கோடி அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது.
உலக வங்கியின் சர்வதேச வறுமைக்கோட்டின்படி, கடந்த 40 ஆண்டுகளில் வறுமையிலிருந்து மீட்கப்பட்ட சீன மக்களின் எண்ணிக்கை உலகளாவிய மொத்தத்தில் 70 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது’ என கூறினார்.