பிரித்தானியாவில் எக்ஸ்பீரியன் என்ற தனியார் நிறுவனத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில், இழப்பீடாக பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் தலா 750 பவுண்டுகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எக்ஸ்பீரியன் ஒரு முன்னணி உலகளாவிய தகவல் சேவை நிறுவனமாகும், இது உலகெங்கிலும் உள்ள தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தரவு மற்றும் பகுப்பாய்வு தொடர்பான சேவைகளை வழங்கி வருகிறது.
இந்த நிறுவனமானது 46மில்லியன் தனிநபர்களின் தரவுகள் மொத்தமும் சேகரித்து வைத்துள்ளது. ஆனால் குறிப்பிட்ட தனிநபர் தரவுகளை இந்த நிறுவனம் சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, வெள்ளிக்கிழமை, வடக்கு டோர்செட்டில் வசிக்கும் சட்டத்தரணி லிஸ் வில்லியம்ஸ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் 750 பவுண்டுகள் இழப்பீடு கேட்டு ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
பிரித்தானியர்களின் தனிப்பட்ட தரவுகள் அனைத்தும் வணிக லாபத்திற்காக விற்கப்படுகிறது என அதில் குற்றாஞ்சாட்டினார்.
எக்ஸ்பீரியன் நிறுவனம் பிரித்தானியர்களின் தனிப்பட்ட தரவுகளை அவர்களின் அனுமதியின்றி, அரசியல் குழுக்கள் உட்பட்ட மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை செய்துள்ளதை கடந்த அக்டோபர் மாதம் தகவல் ஆணையர் அலுவலகம் கண்டறிந்தது.
தொடர்ந்து எக்ஸ்பீரியன் நிறுவனத்திற்கு 20மில்லியன் பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டது.
ஆனால் அந்த நிறுவனம் குறித்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு மேற்கொண்டனர். இந்த நிலையிலேயே சட்டத்தரணி லிஸ் வில்லியம்ஸ் எக்ஸ்பீரியன் நிறுவனத்திற்கு எதிராக ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கில் அவர் வெற்றியடைந்தால், இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள சுமார் 46மில்லியன் மக்களுக்கு தலா 750 பவுண்டுகள் தொகை இழப்பீடாக கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
ஆனால் எக்ஸ்பீரியன் இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் உரிய பதிலளிக்கும் என தெரிவித்துள்ளதுடன்,
இந்த வழக்கை முன்னெடுப்பதற்கு எந்தவொரு நியாயமான காரணமும் இருப்பதாக நாங்கள் நம்பவில்லை எனவும் தெரிவித்துள்ளது.