ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரகவாசிகளின் கலம் ஒன்றை வானில் நேரில் பார்த்ததாக அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானி ஒருவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதனை அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI உறுதிப்படுத்தியுள்ளது.
ஏலியன்கள் இருக்கிறார்களா இல்லையா என்பது நீண்ட நெடிய சந்தேகத்துக்குரிய ஒரு விவாதமாகவே பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது.
உலகின் பல பகுதிகளை சேர்ந்தவர்களில் சிலர் தாங்கள் ஏலியன்களை பார்த்திருப்பதாகவும், பறக்கும் தட்டுகளை பார்த்தாகவும், வேற்றுகிரகவாசிகளின் கலன்களை பார்த்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.
ஆனால் இதற்கான நம்பகத்தன்மை என்பது கேள்விக்குறியே. சுருக்கமாக UFO என அழைக்கப்படும் unidentified flying objects அதாவது அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்களை பார்துள்ளதாக அவ்வப்போது சிலர் கூறி வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த வாரம் அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சின்சினாட்டி நகரில் இருந்து ஃபீனிக்ஸுக்கு பயணமானது. நியூமெக்ஸிகோ வான் பரப்பில் 35,000 அடிக்கு மேல் பறந்து கொண்டிருந்த போது விமானத்தினை வேகமாக மர்ம பொருள் ஒன்று அதிவேகமாக கடந்ததை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார். உடனடியாக விமான கட்டுப்பாட்டு பிரிவை தொடர்பு கொண்டு மேலே ஏதும் தாக்குதல் இலக்கு இருக்கின்றதா என வினவியுள்ளார்.
ஸ்டீவ் டக்லஸ் என்ற ஏர்லைன் ரேடியா ஆர்வலர் ஒருவர் மர்ம பொருளை பார்த்த விமானியின் 15 நொடி வாய்ஸ் ரெக்கார்டிங்கை தனது பிளாகில் பதிவேற்றியிருந்தார். அதில் உருளை வடிவ பொருள் ஒன்று தங்களின் விமானத்திற்கு மேல் அதிவேகமாக பறந்ததாகவும் இதை பற்றி கூற வெறுப்பதாகவும் கூறுகிறார். அது ஏதும் ஏவுகணையா என தெரியவில்லை எனவும் கூறியுள்ளார்.
ஸ்டீவ் டக்லஸின் இந்த ஆடியோ பதிவை அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக FBI-ன் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறும்போது சந்தேகத்திற்கிடமான அல்லது குற்றச் செயல்களை அறிந்த எவரும் தங்கள் உள்ளூர் சட்ட அமலாக்க அமைப்பு அல்லது எஃப்.பி.ஐ-ஐ தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்.
வேற்றுகிரக வாசிகளின் நடமாட்டம் பூமியில் இருக்கிறதா என்ற விவாதத்திற்கு 21ம் நூற்றாண்டிலாவது விடை கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டியுள்ளது.