இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் மேட்ரிமோனியல் தளம் ஒன்றால் அறிமுகமான கனேடியரால் இளம் பெண் ஒருவர் லட்சங்களை இழந்துள்ளார்.
ஐதராபாத் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் சில மாதங்களுக்கு முன்னர் மேட்ரிமோனியல் தளம் ஒன்றில் தமது திருமணத்திற்காக பதிவு செய்துள்ளார்.
தொடர்ந்து தேடியதில் கனேடியர் ஒருவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. இருவரும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தங்கள் தொலைபேசி இலக்கங்களை பகிர்ந்து கொண்டதுடன், அதன் பின்னர் நெருக்கமாக பழகியுள்ளனர்.
கனடாவில் மருத்துவராக பணியாற்றி வருவதாக கூறிய அந்த நபர், சில நாட்களுக்கு பின்னர் நிச்சயதார்த்தம் ஆடம்பரமான முறையில் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும், சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை தாம் அனுப்பி வைக்க உள்ளதாகவும், திருமணத்திற்கு முன்னர் ஒரு பரிசாக இருக்கட்டும் எனவும் அந்த கனேடியர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு பின்னர் குறித்த இளம் பெண்ணிற்கு தொலைபேசியில் ஒரு அழைப்பு வந்துள்ளது.
அதில், டெல்லி விமான நிலையத்தில் இருந்து அழைப்பதாகவும், ஒரு கோடி மதிப்பிலான தங்க நகைகள் கைப்பற்றியுள்ளதாகவும், சட்டத்தின் படி 10.69 லட்சம் வரியாக செலுத்தினால், நகைகளை வாங்கிச் செல்லலாம் என கூறியுள்ளனர்.
அதை மொத்தமாக நம்பிய குறித்த இளம் பெண்ணும் அவர்கள் குறிப்பிட்ட தொகையை இணையம் மூலம் செலுத்தியுள்ளார்.
ஆனால் அதன் பின்னர் அந்த டெல்லி விமான நிலையத்தில் இருந்து வந்த தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டால், அது தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக கூறியுள்ளது.
மட்டுமின்றி, இதுநாள் வரை பேசி வந்த கனேடிய மருத்துவரின் தொலைபேசி இலக்கமும் தொடர்பு கொள்ள முடியாமல் இருந்துள்ளது.
பல முறை தொடர்ந்து முயன்றும் ஏமாற்றமடைந்த குறித்த இளம் பெண் உடனடியாக பொலிசாரை நாடியுள்ளார்.
பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், டெல்லி விமான நிலையத்தில் இருந்து அழைப்பதாக கூறிய நபர் உத்தரபிரதேசத்தின் பரேலியில் வசிக்கும் முகமது ஹசீன் என்பது தெரியவர அவரை கைது செய்துள்ளனர்.
தற்போது கனேடியர் என கூறி இளம் பெண்னை ஏமாற்றிய நபர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.