கடந்த ஆண்டு மும்பையில் வரலாறு காணாத அளவுக்கு மின் தடை ஏற்பட்டது, சீன ஹேக்கர்களின் கைவரிசை காரணமாகத் தான் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே கடந்த ஆண்டு லடாக்கின் கல்வான் பகுதியில் மோதல் ஏற்படுவதற்கு முன்னதாகவே சீன ஹேக்கர்கள் இந்தியா மீது சைபர் யுத்தத்தில் ஈடுபட்டது தற்போது தெரியவந்துள்ளது.
இணைய பயன்பாட்டை கண்காணித்து வரும் Recorded Future என்ற அமெரிக்க நிறுவனம் நடத்திய சமீபத்தில் ஆய்வில், மின்பகிர்மான கழகம், துறைமுகங்கள் உள்ளிட்ட 12 முக்கியமான இந்திய அரசு நிறுவனங்களின் மீது சீன ஹேக்கர்கள் சைபர் தாக்குதலை கடந்த ஆண்டு நடத்தியதாக தெரியவந்துள்ளது. இது பிரபல நியூயார்க் டைம்ஸ் இதழில் செய்திக்கட்டுரையாகவும் வெளிவந்துள்ளது.
இந்தியா முழுவதும் மின்சார விநியோகத்திற்கு பொறுப்பான NTPC நிறுவனத்தின் இணைய நெட்வொர்க்கினுள் சீன ஹேக்கர்களால் மால்வேர் செலுத்தப்பட்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நிறுவனங்களின் மீதான சீன ஹேக்கர்களின் தொடர் கைவரிசை, கல்வான் மோதல் நடைபெற்ற 2020 ம் ஆண்டு மே மாதத்திற்கு பல நாட்களுக்கு முன்னதாகவே தொடங்கிவிட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபரில் மும்பை மாநகர் மற்றும் சுற்றுப்புறங்களில் கடும் மின் தடை ஏற்பட்டது. சுமார் 10 முதல் 12 மணி நேரங்கள் வரை தொடர்ந்த இந்த மின் தடை காரணமாக மின்சார ரயில் சேவை, மும்பை பங்குச்சந்தை, மருத்துவமனைகளின் இயக்கம் போன்றவை தடைபட்டது. இதுவரை வரலாற்றில் இப்படி ஒரு மிந்தடை ஏற்பட்டதில்லை என கூறப்பட்டது.
தற்போது மும்பை மின் தடைக்கும் காரணம் சீன ஹேக்கர்களின் கைவரிசை என்பது தெரியவந்துள்ளது. முன்னதாகவே கடந்த ஆண்டு இது சதிச் செயல் காரணமாக இருக்கலாம் என மகாராஷ்டிர எரிசக்தித்துறை அமைச்சர் நிதின் ராவத் கூறிய நிலையில் தற்போது நியூயார்க் டைம்ஸ் இதழில் வெளியானது உண்மை தான் என அவரே ஒப்புதல் அளித்திருக்கிறார்.
இது தொடர்பாக அமைச்சர் நிதின் ராவத் கூறுகையில் ஆம், அது உண்மை தான். இதற்காக 3 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான அறிக்கை இன்று மாலைக்குள் சைபர் பிரிவினரிடம் இருந்து கிடைக்கப் பெறும் என கூறினார்.