பேஸ்புக் மூலம் ஏற்பட்ட காதலால் இளம்பெண்ணின் திருமணம் நின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், சென்னை திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரை பேஸ்புக் மூலம் அறிமுகமாகி பழகி வந்துள்ளார். இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனை அடுத்து கண்ணன் அடிக்கடி ஜெய்ஹிந்துபுரம் வந்து அப்பெண்ணை சந்தித்து பேசியதோடு, இருவரும் பல இடங்களுக்கு சென்று புகைப்படங்களும் எடுத்துள்ளனர். திடீரென கண்ணனுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அப்பெண் அவருடன் பேசாமல் விலகிச் சென்றுள்ளார்.
இந்நிலையில் அப்பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளன. இதை தெரிந்துகொண்ட கண்ணன், பேஸ்புக்கில் போலியான பக்கத்தை உருவாக்கி, அதில் இளம்பெண்ணுடன் எடுத்த புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளார். மேலும் அப்பெண்ணை திருமணம் செய்யவிருந்த மணமகனுக்கும் செல்போனில் புகைப்படங்களை அனுப்பியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மணமகன் உடனே திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக கண்ணனைத் தொடர்புகொண்டு மணமகன் விசாரித்துள்ளார். அப்போது, பெண்ணின் தந்தை தன்னிடம் பேச வேண்டும் என்றும், லட்சக்கணக்கில் பணம் தந்தால் இந்த புகைப்படங்களை பேஸ்புக்கில் இருந்து நீக்குவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட இளம்பெண் மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்காவிடம் ஆன்லைன் மூலமாக புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து ஜெய்ஹிந்துபுரம் காவல் ஆய்வாளர் சேது மணிமாதவன் தலைமையில் தனிப்படை அமைத்து சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் மதுரையில் பதுங்கியிருந்த கண்ணனை சுமார் 2 மணி நேரத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். திருமண ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்துகொண்டிருந்த சமயத்தில், பேஸ்புக் காதலரால் இளம்பெண்ணின் திருமணம் நின்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.