கர்நாடகாவில் புதிதாக பிரிக்கப்பட்டுள்ள விஜயநகரா மாவட்டத்தின் ஹோஸ்பேட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்குள் இருந்த 48 வயதான வழக்கறிஞர் ஒருவரை 22 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்திருக்கிறார். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த துனிகர சம்பவம் வழக்கறிஞர்கள், போலீசார் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று ஹோஸ்பேட் நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர் தாரிஹள்ளி வெங்கடேஷ் என்பவர் தனது நண்பர்களுடன் அமர்திருந்த போது அங்கு இருசக்கர வாகனத்தில் 22 வயதாகும் தாரஹள்ளி மனோஜ் என்ற இளைஞர் அவர்கள் முன் வந்து வாகனத்தில் இருந்து அவசரமாக இறங்கி, மறைத்து வைத்திருந்த கத்தியால் வழக்கறிஞர் தாரிஹள்ளி வெங்கடேஷை கழுத்திலும், மார்பிலும் சரமாரியாக குத்தினார். நீதிமன்ற வளாகத்திற்குள் நடைபெற்ற இந்த கொலையை பார்த்த வழக்கறிஞர்கள், பொதுமக்கள், காவல்துறையினர் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இருப்பினும் சுதாரித்துக் கொண்ட காவல்துறையினர் இளைஞர் மனோஜ் தப்பியோடும் முன்னர் அவரை மடக்கிப் பிடித்தனர். இதனிடையே கத்தியால் குத்தப்பட்ட வழக்கறிஞர் தாரிஹள்ளி வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இளைஞர் மனோஜை கைது செய்த காவல்துறையினர் ஹோஸ்பேட் காவல்நிலையத்திற்கு அவரை அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது குத்தப்பட்ட வழக்கறிஞரின் உறவினர் தான் மனோஜ் என்பது தெரியவந்தது. இருவரும் ஒரே பகுதியில் வசித்து வந்தது தெரியவந்துள்ளது மேலும் கொலைக்கான காரணம் சொத்து தகறாரா என்பதும் தெரியவரவில்லை.
கொல்லப்பட்ட வழக்கறிஞர் தாரிஹள்ளி வெங்கடேஷ் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் என்பதால் வேறு ஏதேனும் காரணத்தினால் கொல்லப்பட்டிருப்பாரா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர். அவருக்கு மனைவியும், 4 குழந்தைகளும் உள்ளனர்.
சிறிது நாட்களுக்கு முன்னதாக தெலங்கானாவில் வழக்கறிஞர் தம்பதி சாலையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது கர்நாடகாவில் வழக்கறிஞர் நீதிமன்றத்திலேயே படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.