சீமானுக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் தேர்தல் தொடர்பில் ரகசிய டீலிங் உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் முன்னாள் உறுப்பினரும், தற்போது திமுகவில் ஐக்கியமானவருமான ராஜீவ்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் திகதி நடைபெறவுள்ளது. தேர்தல் திகதி அறிவிப்பு வெளியாகிவிட்டதால் அத்தனை அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றன.
அதிமுக, கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில், நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண தயாராகியுள்ளது.
மேலும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எங்கு போட்டியிடுகிறாரோ அந்த தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று சீமான் முன்னர் கூறியிருந்தது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் எடப்பாடி பழனிசாமி ரகசிய டீலிங் பேசியுள்ளதாக ராஜீவ்காந்தி கூறியுள்ளார்.
சீமானின் தம்பியாக இருந்த ராஜீவ்காந்தி நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் திமுகவில் இணைந்து உடன்பிறப்பாக மாறினார்.
ஆளுங்கட்சியான அதிமுகவை விமர்சிக்காமல் அக்கட்சிக்கு எதிராக களம் காணுவேன் என்று தெரிவிக்காமல் ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் போட்டியிடுவேன் என்று திமுகவுக்கு எதிரான மனநிலையில் இருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், நாம் தமிழர் கட்சி அதிமுகவின் ‘பி’ டீம் என்று விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், ராஜீவ் காந்தி மேற்கண்ட தகவலை தெரிவித்துள்ளார்.
மேலும், இதற்கான ரகசிய டீலிங் சீமான் – எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடையே நடைபெற்று முடிந்து விட்டது என்றும், கண்டிப்பாக சீமான் நிற்கும் தொகுதியில் அதிமுக வேட்பாளரை நிறுத்தாது பாருங்க என்றும் அவர் தெரிவித்துள்ளார்.