இலங்கை கைத்தொழில்துறை மற்றும் ஏற்றுமதி துறையின் முக்கிய திருப்புமுனையாக ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகை அடுத்த வாரம் இலங்கைக்கு மீண்டும் கிடைக்கும் என்ற தகவல் கிடைத்துள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஹல்ஓலுவ தொடங்வல பாலத்தை மக்களின் பயன்பாட்டுக்காக இன்று(06) திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் நாடு முன்னோக்கிச் செல்வதற்கு இருந்த தடைகளை நீக்கவும் அனைத்து நாடுகளுடன் நட்புறவைக் கட்டியெழுப்பவும் அரசாங்கத்தினால் முடிந்துள்ளது. இதன் பலாபலன்கள் தற்போது நாட்டுக்கு கிடைத்து வருகிறது.
அபிவிருத்தி பற்றி பெருமை பேசுவது போல் அந்த அபிவிருத்தியுடன் நாட்டுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய கடன் சுமை பற்றியும் கவனம் செலுத்த வேண்டும்.
பெருந் தொகையை கடனாக பெற்று மிகப் பெரிய அபிவிருத்தித் திட்டங்களை செயற்படுத்தி தற்போதைய அரசாங்கத்திற்கும் பிரபலத்தை பெற்றுக் கொள்ள முடியும்.
எனினும் பாரிய கடன் தொகையை நாட்டுக்கு உரித்தாக்கி எதிர்காலத்தை இருள் சூழ்ந்ததாக மாற்ற அரசாங்கம் எந்த வகையிலும் தயாரில்லை. பாரிய கடன் சுமையால் உலகின் பல நாடுகள் எதிர்நோக்கிய அனர்த்தங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் தொழிற்பேட்டை தொடர்பாக சிலர் தவறான பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். நாட்டில் உள்ள ஒரு அங்குல நிலத்தை கூட எந்த வெளிநாட்டுக்கும் வழங்கப் போவதில்லை.
தொழிற்சாலைகள் மட்டுமல்ல புதிய முதலீடுகள் நாட்டுக்கு அவசியம். இதற்காக இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் சட்ட திட்டங்களுக்கு அமையவே காணிகள் வழங்கப்படும்.
சிலர் கூறுவது போல் கிராமங்களில் வாழும் மக்களை அவர்களுடைய இடத்திலிருந்து வெளியேற்ற அரசாங்கம் இடமளிக்கவில்லை. நாடுகள், வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள், சர்வதேச அமைப்பு என அனைத்து தரப்புடன் ஏற்படுத்திக் கொள்ளும் சகல உடன்படிக்கைகளும் வெளிப்படையாகவே மேற்கொள்ளப்படும். நாட்டின் அபிவிருத்திக்காக தற்போதைய அரசாங்கம் மிக நேர்மையான அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது.
அரசாங்கத்தை கவிழ்க்கப் போவதாக சிலர் கூறினாலும் தற்போதைய அரசாங்கத்தை எவராலும் கவிழ்க்க முடியாது. 2020 ஆம் ஆண்டுக்கு பின்னர் தேர்தல் ஒன்றில் புதிய அரசாங்கத்தை தெரிவு செய்ய முடியுமே அன்றி அதற்கு முன்னர் அரசாங்கத்தை கவிழ்க்க எவருக்கும் எந்த சந்தர்ப்பமும் வழங்கப்பட மாட்டாது எனத் தெரிவித்தார்.