வவுனியா நகரில் தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் மீது நேற்று மாலை அடையாளம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் நடத்துனரும், சாரதியும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் நேற்று மதியம் நபர் ஒருவர் தொலைபேசியினை வவுனியாவில் உள்ள தனது நண்பரிடம் கொடுக்குமாறு குறித்த நடத்துனரிடம் வழங்கி சென்றுள்ளார்.
பேருந்து வவுனியாவை சென்றடைந்ததும் தொலைபேசியை வழங்கியவரின் நண்பர், பேருந்து நடத்துனரிடம் தொலைபேசியினை வாங்கி சென்றுள்ளார்.
அவர் தொலைபேசியினை வாங்கி சென்ற பின் அதே தோலைபேசியினை தருமாறு கூறி மற்றுமொரு பெண் பழைய பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது நடத்துனர், தான் தொலைபேசியினை கொடுத்து விட்டதாக கூறியுள்ளார்.
அதன்போது அப்பெண்ணுடன் வந்த சில நபர்கள் சாரதி மற்றும் நடத்துனரை தாக்கியதுடன் நடத்துனரை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்று வவுனியா நகரை அண்டிய தோணிக்கல் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் வைத்து தாக்கியுள்ளதாக தெரியவருகிறது.
தாக்குதல் நடத்திய பின்னர் முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்று மீண்டும் பழைய பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு தொலைபேசி கிடைத்து விட்டது தவறுதலாக நடந்து விட்டது மன்னித்து விடுங்கள் என்று கூறு நடத்துனரை அவ்விடத்தில் விட்டு சென்றுள்ளனர் என தெரியவருகிறது.
காயமடைந்த நடத்துனர் மற்றும் சாரதி வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தமையுடன், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
தாக்குதல் நடத்திய நபர்கள் தொடர்பில் சிசிடிவியின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.