இயக்குனர் ஷங்கரின் படைப்பிலும், பிரபு தேவாவின் அசத்தலான நடிப்பிலும் 1994-ம் ஆண்டு வெளியான ‘காதலன்’ திரைப்படம் ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் உருவான பாடல்களுக்காகவே வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது.
குறிப்பாக, கவலையே தெரியாத வாலிப வயதில் அரட்டை அடிக்கும் கும்பலை கவரும் வகையில் வைரமுத்துவின் வரிகளில் வெளியான ‘ஊர்வசி, ஊர்வசி’ என்ற பாடல் அப்போது பட்டி தொட்டிகளில் எல்லாம் மிகப் பிரபலமானது.
எப்படிப்பட்ட கவலை வந்தாலும், அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை மையப்படுத்தி, ‘ஊர்வசி, ஊர்வசி – டேக் இட் ஈசி ஊர்வசி’ பாடல் எழுதப்பட்டிருந்தது.
இந்தப் பாடல் வெளியாகி சுமார் 23 ஆண்டுகள் ஆகும் நிலையில் மீண்டும் இதே மெட்டுக்கு வரிமாற்றம் செய்து ‘ஊர்வசி, ஊர்வசி’க்கு மீண்டும் புத்துயிர் அளிக்க இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தீர்மானித்தார்.
இதன் எதிரொலியாக, இந்தியாவில் பண ஒழிப்பு, அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான ஆட்சி மாற்றம் உள்ளிட்ட தற்கால சங்கதிகளை உள்ளடக்கி புதிய ‘ஊர்வசி, ஊர்வசி’ பாடல் உருவாகியுள்ளது.
இதற்கான அறிவிப்பை தனது பிறந்தநாளான இன்று (6-1-2017) ஏ.ஆர். ரஹ்மான் தனது டுவிட்டரில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார். வரும் 14-ம் தேதி எம்.டி.வி. சேனலில் ஒளிபரப்பாகவுள்ள நிகழ்ச்சியில் இந்தப் பாடல் வெளியாகிறது.
தற்கால சூழலுக்கு ஏற்ப, இந்தப் புதிய பாடலுக்கு வரிவடிவத்தை இளைய தலைமுறையினர் பலர் கொடுத்துள்ளனர்.
அவற்றில், ‘பெல்ட்டு போட்டும் வேஷ்டி அவுந்தா – டேக் இட் ஈசி பாலிசி’, ‘ஹெல்மெட் போட்டும் மாமா புடிச்சா – டேக் இட் ஈசி பாலிசி’, ‘கடலை நடுவில் பாட்டரி தீர்ந்தா – டேக் இட் ஈசி பாலிசி’, ‘கிழிஞ்ச பேண்ட்டை பேஷன்னு சொன்னா – டேக் இட் ஈசி பாலிசி’ போன்ற வரிகள் இன்றைய தலைமுறை கூட்டத்தை நிச்சயமாக கவரும் என எதிர்பார்க்கலாம்.