அ.தி.மு.க. கூட்டணியில் நீடித்து வரும் நிலையில், கூட்டணிக்கு எங்களை அழைக்கவில்லை’ என்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வருத்தம் கொண்டிருந்தார். இதையடுத்து தே.மு.தி.க.வை, அ.தி.மு.க. பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. இதில் பா.ம.க.வுக்கு தந்தது போல இடங்களை (23 தொகுதிகள்) தே.மு.தி.க. கேட்டது. இதற்கு அ.தி.மு.க. உடன்படவில்லை.
இதனால் அந்த பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படவில்லை. 2-ம் கட்டமாக ஏற்பாடு செய்திருந்த பேச்சுவார்த்தை கூட்டத்தை தே.மு.தி.க. புறக்கணித்தது. 3-ம் கட்டமாக நடந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.
குறைந்தது 20 தொகுதிகள் வரை கேட்டும் தே.மு.தி.க.வின் கோரிக்கையை அ.தி.மு.க. ஏற்க தயங்கியது. இதனால் அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே தொகுதி பங்கீடு உறுதி செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.
‘அ.தி.மு.க.தான் கெஞ்சுகிறது’
ஏற்கனவே தி.மு.க.வுடன், தே.மு.தி.க. மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது என்று கூறப்படும் நிலையில், தே.மு.தி.க. துணை செயலாளர் எல்.கே.சுதீசின் ஆக்ரோஷமான பேச்சு அரசியல் களத்தை பரபரப்புக்குள்ளாக்கி இருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நேற்று முன்தினம் நடந்த தே.மு.தி.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், ‘‘கூட்டணிக்காக நாம் கெஞ்சி கிடக்கவில்லை. அ.தி.மு.க.தான் கூட்டணிக்காக நம்மிடம் கெஞ்சுகிறது. 2011-ம் ஆண்டில் நாம் கைகோர்க்கவில்லை என்றால் அ.தி.மு.க. நிலை படுமோசமாகியிருக்கும்”, என்று காரசாரமாக பேசியிருக்கிறார்.
இது அ.தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனாலும் தே.மு.தி.க.வை கைவிட அ.தி.மு.க. நினைக்கவில்லை என்றுதான் கூறப்படுகிறது. தே.மு.தி.க. கேட்கும் தொகுதிகள் மிகுதியாக இருப்பதாலேயே அ.தி.மு.க. தயங்கி வருகிறது. அதேவேளை தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியின் முடிவுக்காக தே.மு.தி.க. ஆர்வமாக இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
அடுத்தக்கட்ட நடவடிக்கை
இதற்கிடையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு தாக்கல் செய்தார். ஆனால் அவர் தாக்கல் செய்த மனுவில் போட்டியிடக்கூடிய தொகுதி என்று எந்த தொகுதியின் பெயரும் குறிப்பிடவில்லை. இது பல்வேறு கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது.
தேர்தல் வேட்புமனுக்கான நாள் நெருங்கும் நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க., த.மா.கா.வுக்கு ஓரிரு நாளில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தே.மு.தி.க.வுக்கு, அ.தி.மு.க.வின் கூட்டணி கதவு திறக்கப்படுமா? என்பது கேள்விக்குறியாகவே நீடிக்கிறது. தே.மு.தி.க.வின் தன்னிச்சையான போக்கு கூட்டணி பேச்சுவார்த்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், தே.மு.தி.க.வின் அடுத்தக்கட்ட நடவடிக்கையை பொறுத்தே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பிடிக்க வாய்ப்பு உண்டா, இல்லையா? என்பதை தீர்மானிக்க முடியும் என்றும் அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். உரிய இடங்கள் கிடைக்கவில்லை என்றால் தனித்து போட்டியிடலாம் என்று ஏற்கனவே நிர்வாகிகள் கூட்டத்தில் பிரேமலதா சூளுரைத்து பேசியது குறிப்பிடத்தக்கது.