தலைமன்னாரில் ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “தலைமன்னார் கடற்பகுதியில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது ஐஸ் போதைப் பொருளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையின் ரோந்து நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான மீன் பிடி படகொன்றை அவதானித்துள்ள படையினர் அதனை சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.
இதன்போது படகில் மீன்பிடி வலைக்குள் மிகவும் சூட்சகமான முறையில் மறைத்து எடுத்துவரப்பட்ட ஒரு கிலோ 21 கிராம் ஐஸ் போதைப்பொருளை கைப்பற்றியுள்ள கடற்படையினர், படகில் வந்த மூவரையும் கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த பகுதியிலிருந்த இன்னுமொருவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நால்வரும் தலைமன்னாரினைச் சேர்ந்தவர்களாவர். மேலதிக விசாரணைக்காக இவர்களை தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.