சுவிட்சர்லாந்தில் 9,000க்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில், சுவிட்சர்லாந்தில் வாழும் அனைவரும் இன்று காலை மணி 11.59க்கு, அவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த இருக்கிறார்கள்.
அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள தேவாலய மணிகள் ஒலிக்க இருக்கின்றன. இது தொடர்பாக பொருளாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ஒரு ஆண்டாக இந்த கொள்ளைநோய் உலகத்தையே அசைத்து வருகிறது, சுவிட்சர்லாந்து அதற்காக கொடுத்த விலையும் பெரியது. கொரோனாவுக்கு 9,000க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
கொரோனா தாக்கிய பலர் இன்னமும் அதன் பக்க விளைவுகளால் அவதியுற்று வருகிறார்கள். ஆயிரக்கணக்கானோர் வேலையை இழந்தது மட்டுமல்ல பலர் தங்கள் நம்பிக்கையையும் இழந்துவிட்டார்கள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் மற்றும் இந்த கொள்ளைநோயால் ஏற்பட்ட பிரச்சினைகளை மேற்கொள்வதற்காக தியாகம் செய்தவர்களுக்கு நமது நன்றியைத் தெரிவிக்கும் வகையில், இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கு கொள்ளுமாறு பொருளாதார அமைச்சரும் இந்த ஆண்டின் சுவிட்சர்லாந்துக்கான ஜனாதிபதியுமான Guy Parmelin மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த ஒரு நிமிட மவுன அஞ்சலி இறந்தவர்களுக்காக துக்கம் அனுஷ்டிக்க மட்டுமல்ல, நமது ஒற்றுமை, நட்பு மற்றும் ஆறுதலிலிருந்து முன்னோக்கிச் செல்வதற்கான வலிமையை பெற்றுக்கொள்வதற்குமாகும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.