கொரோனாவால் ஏற்படும் இறப்புகளைப் பார்த்து அழுது குறை கூறுவதை நிறுத்துங்கள் என்று பிரேசிலிய மக்களிடம் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனோரா காட்டமாக கூறியுள்ளார்.
பிரேசிலில் கொரோனாவால் ஏற்படும் இறப்புகள் இரண்டு நாட்களாக அதிகரித்து வருகிறது.
நேற்று மட்டும் 75, 102 பேர்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் 1,699 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா பலி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அரசுக்கு எதிரான விமர்சனங்களும் கடுமையாக அதிகரித்து வருகின்றன.
இதனிடையே பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஜனாதிபதி ஜெய்ர் போல்சனோரா, நீங்கள் எவ்வளவு காலம் குறை சொல்லி அழுது கொண்டு புலம்புவீர்கள்.
எவ்வளவு நாள் வீட்டிலேயே முடங்கி இருப்பீர்கள். இதனை யாராலும் இனி பொறுத்துக் கொள்ள முடியாது.
கொரோனாவால் நாட்டில் ஏற்பட்டிருக்கும் இறப்புகளுக்கு நான் வருந்துகிறேன். இதற்கான தீர்வை விரைவில் கண்டுப்பிடிப்போம் என்றார்.
உலகம் முழுவதும் வியாபித்துள்ள கொரோனா பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் பிரேசிலும், மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன.
இதனிடையே, பிரேசிலில் உருமாற்றம் கண்ட கொரோனா தொற்றால், உலக நாடுகள் மொத்தமும் இன்னொரு முழு ஊரடங்கிற்கு உட்படலாம் என்ற எச்சரிக்கையை முதன்மை விஞ்ஞானி ஒருவர் வெளியிட்டுள்ளார்.
மேலும், பிரேசிலில் உருமாற்றம் கண்ட கொரோனா தொற்றானது மிகவும் ஆபத்தானது எனவும், அதிக உயிர் பலி வாங்கக்கூடியது என ஏற்கனவே விஞ்ஞானிகள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், பிரித்தானியாவில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ், ஜேர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவியது.
இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கொரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.